நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பு தொடர்பாக, டில்லி பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி. இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக முதலில் டில்லி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி உள்ளது.
அவசர கூட்டம்
உச்ச நீதிமன்றத்தில், டில்லி பல்கலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மிஸ்ரா தாக்கல் செய்த மனு:
யு.ஜி.சி., வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் தான், நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை கடந்த ஆண்டு டில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இது தொடர்பாக அவசர சட்டம் ஒன்றையும், பல்கலை நிர்வாகம் அமல்படுத்தியது.
பட்டப் படிப்பு ஆரம்பித்து ஒரு ஆண்டுக்குப் பின் அது செல்லாது என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவிப்பது சரியல்ல. இந்த விஷயத்தில் யு.ஜி.சி. மற்றும் டில்லி பல்கலை இடையே மோதல் உருவாகி உள்ளது. மேலும் மூன்றாண்டு பட்டப் படிப்பில் மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும்; நான்காண்டு படிப்பில் சேர்க்கக் கூடாது என, டில்லி பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் 64 கல்லூரிகளுக்கும் யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.
எனவே யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் அல்லது உத்தரவை வாபஸ் பெறும்படி யு.ஜி.சி.க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரப்பட்டிருந்தது.
பரிசீலிப்போம்
இந்த மனுவை நேற்று பரிசீலித்த நீதிபதிகள் விக்கிரமஜித் சென் மற்றும் எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: முதலில், இந்தப் பிரச்னையை டில்லி உயர் நீதிமன்றத்திற்கு பேராசிரியர் மிஸ்ரா எடுத்துச் செல்ல வேண்டும். ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் திருப்தி இல்லையெனில் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அப்போது நாங்கள் அதை பரிசீலிப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
துணைவேந்தர் ராஜினாமா
நான்காண்டு பட்டப் படிப்பு தொடர்பாக யு.ஜி.சி. மற்றும் டில்லி பல்கலை இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், டில்லி பல்கலையின் துணைவேந்தர் தினேஷ் சிங் நேற்று ராஜினாமா செய்தார். இந்தத் தகவலை பல்கலையின் மீடியா ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
நான்காண்டு பட்டப் படிப்பு சர்ச்சை தொடர்பாகவே அவர் பதவி விலகியிருக்கலாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
No comments:
Post a Comment