பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் முன் பின் தெரியாதவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என, பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.
அண்ணா பல்கலையில் விரைவில் பொறியியல் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில், பிளஸ் 2 முடித்தவர்கள் தயக்கமின்றி கலந்து கொள்வதற்காக தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை தொழில்நுட்ப பயிலகம் இணைந்து நடத்திய உங்களால் முடியும் நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது. இதில், ஏரளாமான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமாக பங்கேற்றதால், நிகழ்ச்சி நடந்த விஜய்ஸ்ரீ மகால் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விழாவில், சென்னை தொழில்நுட்ப பயிலகம் தலைவர் ஸ்ரீராம் பேசும்போது, இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்கள், தங்களின் திறனை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: பொறியியல் படிப்புக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள், கல்லூரியில் சேரும்போதே நான் இன்ஜினியர்; எனக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள், பாடப்பிரிவிற்கு வழங்கும் முக்கியத்துவத்தை விட கல்லூரி தேர்வுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது, என் தனிப்பட்ட ஆலோசனை.
நான்கு ஆண்டுகளில், படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது. எந்த கல்லூரியில் சேர விரும்புகிறீர்களோ அந்த கல்லூரிக்கு முன்பே சென்று அங்குள்ள கட்டடம், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் குறித்து மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டும் பார்த்து வேலை கொடுப்பதில்லை. எனவே, மாணவர்கள், படிக்கும் போது தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வரும் 27ம் தேதி முதல் பொது கலந்தாய்வு நடக்க உள்ளது. ஒரு நாளைக்கு 4,000 - 5,000 மாணவர்கள், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். கலந்தாய்விற்கு அழைப்பு கடிதம் வரவில்லை என்றால், பல்கலைக்கு வந்து மாற்று அழைப்பு கடிதத்தை பெற்றுக் கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு முன், கலந்தாய்வு தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கலந்தாய்விற்கு வரும் போது முன் பின் தெரியாத நபர்களின் அறிவுரைகளை கேட்க வேண்டாம். ஏனெனில், அவர்கள் தனியார் கல்லூரிகளின் ஏஜன்ட்களாக இருப்பர். மாணவர்கள் தங்களுடன் நல்ல முடிவு எடுப்போரை உடன் அழைத்து வர வேண்டும். கல்லூரிகளின் பெயர் ஒரே மாதிரியாக இருப்பதால், கலந்தாய்வில் கல்லூரி குறியீடுகளை அறிந்து கொள்ள வேண்டும்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் வேண்டும். ஆனால், அதற்கு நாம் அடிமையாகி விடக் கூடாது. எனவே, மொபைல் போன், இணையதளத்தை தேவை ஏற்படும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும். நான்கு ஆண்டுகளில், எப்படி படிக்கிறோமோ அதற்கேற்ப தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, பெற்றோரின் தியாகத்தை உணர்ந்து கஷ்டப்பட்டு படித்தால், வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
61 பாடப் பிரிவுகள்
இன்ஜினியரிங் கல்லூரிகள், பாடப்பிரிவு குறித்து கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா பேசியதாவது: எந்த கல்லூரியில் என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும், மாணவர்களும் மனம் விட்டு பேசி முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைப்பது மிகவும் கஷ்டமானது.
சில ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்பில் மூன்று பாடப்பிரிவுகள் மட்டும் இருந்தன; தற்போது 61 பாடப் பிரிவுகள் உள்ளன. எனவே, புதிய பாடப் பிரிவுகள் தேர்ந்தெடுக்கும் போது அதற்கான வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எல்லா பாடப்பிரிவுகளிலும், பெண்கள் தைரியமாக படிக்கலாம்.
கலந்தாய்வு நடக்கும் இடங்களுக்கு, முன் கூட்டியே சென்று, பார்வையிடுவது நல்லது. மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும். வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்கும் போது, பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், பொறியியல் கலந்தாய்வு, கல்லூரி, பாடப்பிரிவு குறித்து மாணவர்கள், பெற்றோர் கேள்வி கேட்டனர். அதற்கு, ரைமண்ட் உத்தரியராஜ் மற்றும் ரமேஷ் பிரபா பதில் அளித்தனர். சிறப்பாக கேள்வி கேட்ட 10 மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில் பென் டிரைவ் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் ஜே.என்.என். இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment