Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 8, 2014

    ஜனநாயக சர்வாதிகாரி

    பத்தாண்டுகளுக்கு முன். சுனாமி அடித்த மறுநாள்.

    மாநில பேரழிவு நிர்வாக குழு அவசரமாக கூட்டப்படுகிறது. முதல்வர் தலைமை வகிக்கிறார்.

    மணி 9.30: என்ன நடந்தது, எப்படி நடந்தது, பாதிக்கப்பட்ட இடங்கள் எவை, சேதம் எப்படிப்பட்டது என்ற தகவல்கள் மேப், வரைபடம், போட்டோ, விடியோ மூலம் விளக்கப்படுகிறது.


    மணி 10.30: ’இதுவரை இப்பேர்ப்பட்ட பேரழிவை நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. எந்த ஒரு அரசாங்கத்தாலும் தனியாக சமாளிக்க முடியாது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் நாம் உதவ வேண்டும். என்ன உதவி, அதை எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்யுங்கள். . தமிழ், மலையாளம், தெலுகு பேச தெரிந்த நமது உயர் அதிகாரிகளை இங்கு வரவழையுங்கள். 60 நிமிடங்களில் திட்டம் தயாராக இருக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பிக்கிறார் முதல்வர்.

    மணி 11.30: தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அந்தமான் ஆகியவற்றுக்கு அனுப்ப வேண்டிய நிவாரண பொருட்கள் பட்டியலை தாக்கல் செய்கிறார் தலைமை செயலாளர். இலங்கை, தாய்லாந்து, இந்தொனேசியா தலைவர்களுக்கு உங்கள் இரங்கல் செய்தியையும் நிவாரண ஆஃபரையும் அனுப்பிவிட்டோம் என தகவல் தெரிவிக்கிறார் முதன்மை செயலாளர். இரண்டு சரக்கு விமானங்களில் பொருட்கள் ஏற்றப்படுவதாக அறிவிக்கிறார் வருவாய் செயலாளர்.

    மணி 2.30: பொருட்களை பார்வையிடுகிறார் முதல்வர். ‘தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஆண்கள் குர்தா பைஜாமா அணிவதில்லை. அவர்களுக்கு லுங்கி, சட்டை அனுப்புங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். ‘இந்தியாவை புரிந்து கொள்ளாதவர்கள் ஐஏஎஸ் எப்படி பாஸ் ஆகிறார்களோ, தெரியவில்லை’ என்ற கருத்தை மைக்கிலேயே உதிர்க்கிறார். சம்பந்தப்பட்ட அதிகாரி அசடு வழிகிறார்.

    மணி 4.30: அனைத்து மாநிலங்களிலுமாக அதிகம் பாதிக்கப்பட்ட 67 தாலுகாக்கள் அடையாளம் காணப்படுகின்றன. தலா ஒரு அதிகாரியை நியமித்து, சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது கலெக்டருடன் ஒருங்கிணைந்து நிவாரண உதவிகளை வினியோகிக்கவும், தேவைக்கு ஏற்ப உள்ளூர் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் ஏனைய தொண்டு நிறுவனங்களையும் முயற்சிகளில் இணைத்துக் கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவு பிறப்பிக்கிறார்.

    மணி 5.00: தவறுகளுக்கு இடமளிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளின் ஆணைகளை மீறாமலும் விரைவாக செயல்பட்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தனக்கு ப்ராக்ரஸ் ரிப்போர்ட் அனுப்புமாறு கேட்டுக் கொண்டு கூட்டத்தை முடிக்கிறார் முதல்வர் நரேந்திர மோடி.

    மத்திய அரசின் தேசிய பேரழிவு நிர்வாக குழுவே அப்புறம்தான் கூடுகிறது. குஜராத் முதல்வர் நடத்திய கூட்டத்தின் விவரம் கேள்விப்பட்டு மத்திய அரசு அதிகாரிகள் அதில் பேச்சிழந்து அமர்ந்திருந்தார்கள்.

    - ஆமதாபாத், டெல்லி கூட்டங்களில் பங்கேற்ற அதிகாரிகளிடம் திரட்டிய தகவல் இது. 
    மோடி எப்படி அரசியல் செய்வார் என்பதை பார்த்து விட்டோம்.அவர் எப்படி நிர்வாகம் செய்யப் போகிறார் என்பதை இனிதான் பார்க்கப் போகிறோம். முதல்வராக அவர் குஜராத்தில் வெளிப்படுத்திய வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த நிர்வாக அணுகுமுறை டெல்லியிலும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

    மோடி படிப்பாளி கிடையாது. அறிவுஜீவியும் அல்ல. ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்ற நவீன சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர். அறிவியல் தொழில்நுட்பத்தில் தேர்ந்த அதிகாரிகளை தன்னை சுற்றி அமர வைத்திருப்பதில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பாக தமிழ் அதிகாரிகள் மீது அவருக்கு நம்பிக்கை அதிகம். உரிய மரியாதை கொடுத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ் அதிகாரிகள் எதையும் சாதிப்பார்கள் என்பது அவருக்கு தெரியும். முதல்வரின் தலைமை முதன்மை செயலாளர் என்ற உச்ச பொறுப்பில் மோடி அமர்த்தியிருப்பது கே.கைலாசநாதன் என்ற கேரள தமிழரை. குஜராத் அரசில் ஏகப்பட்ட முக்கிய பதவிகளை வகித்து ரிடையரான கைலாசநாதனுக்காகவே உருவாக்கப்பட்ட பதவி இது. கேகே என சுருக்கமாக குறிப்பிடப்படும் இவர் மோடியுடன் டெல்லி செல்லக்கூடும்.

    குஜராத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கிறது; தேவைப்படும் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவும் தயார் என மோடி அடிக்கடி சொல்கிறார் அல்லவா? அந்த சாதனைக்கு காரணமானவர் மின்சார துறைக்கு பொறுப்பான கூடுதல் தலைமை செயலாளர் டி.ஜெகதீச பாண்டியன். இன்னொரு மிக முக்கியமான தமிழ் அதிகாரி.

    பேரழிவு நிர்வாகம், ஊரக வளர்ச்சி, செய்தி துறைகளில் முத்திரை பதித்துள்ள மற்றொரு அதிகாரி வி.திருப்புகழ். இவர் நமது இறையன்புவின் சகோதரர். இவர்கள் தவிரவும் சில தமிழ் அதிகாரிகள் குஜராத் அரசில் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இந்த அதிகாரிகள், சுதந்திரமாக செயல்பட்டு, பொறுப்பான ஆலோசனைகளை வழங்கி தங்கள் மீது மோடி வைத்துள்ள மரியாதையை முழுமையாக காப்பாற்றுகின்றனர்.

    பிரதமராக பதவி ஏற்ற கையோடு மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்களையும் சந்தித்து பேச மோடிமுடிவு செய்துள்ளார். வழக்கமாக புது அரசு அல்லது புது பிரதமர் பதவியேற்றதும் பிரதமர் அலுவலக செயலாளரும் மத்திய அமைச்சரவை செயலாளரும்தான் ஒவ்வொரு துறையை பற்றிய குறிப்புகளை பிரதமருக்கு நேரில் சமர்ப்பிப்பார். மோடி அதை மாற்றுகிறார். ’நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். அந்தந்த துறைகளின் செயலாளர்களிடமே நான் கேட்டு தெரிந்து கொள்கிறேன்’என கூறிவிட்டார்.

    அமைச்சரவை செயலாளர் இதை வாட்ஸ்அப்பில் போட்ட்தை படித்து செயலாளர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். பிரதமரை சந்திப்பதை வாட்ஸ்அப்பில் சொல்கிறாரே என்பதால் அல்ல. ’செயலாளர்கள் உதவியாளர் எவரையும் அழைத்து வரக்கூடாது; அவரவர் துறை பற்றி அவரவரே விளக்க வேண்டும்; பிரதமரின் கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும்’ என்ற உத்தரவுதான் ஆட்டி வைத்திருக்கிறது. ஏனென்றால், வழக்கமாக இதுபோன்ற பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை துணை செயலாளர் அல்லது வேறு உதவியாளர்தான் சமர்ப்பிப்பார். பிரதமரின் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் அளிக்க வேண்டும். செயலாளர் அதற்கு சம்பந்தம் இல்லாதவர் போல பிரதமர் அருகில் அமர்ந்திருப்பார். என்ன இருந்தாலும் சீனியர் அல்லவா?

    இனிமேல் அந்த வேலைஆகாது என்று தெரிந்ததும் துறையை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள செயலாளர்கள் எல்லோரும் ஹோம்வொர்க் செய்ய ஆரம்பித்து விட்டனர். ’என்ன கொஸ்டின் கேட்பாரோ, என்ன பதில் திருப்தி அளிக்குமோ, தெரியவில்லையே’ என்று தேர்வுக்கு தயாராகும் மாணவனின் மனநிலையில் அரற்றுகிறார்கள். அந்த பயம் நியாயமானது. மோடி கேட்கும் கேள்விகள் அப்படி இருக்குமாம்.

    ‘பெரிய பெரிய திட்டங்களாக நிறைய தொடங்கியிருக்கிறீர்கள். பலே. ஆனால் எதுவுமே குறித்த காலத்தில் முடிக்கப்பட வில்லையே, ஏன்?’

    இதற்கு அவர் வெளிப்படையான பதிலை எதிர்பார்ப்பார். அதாவது, இன்னின்ன காரணங்கள் அல்லது இன்னார் போட்ட முட்டுக்கட்டை என்று உடைத்து சொல்ல வேண்டும்.

    ‘சரி, ஆறு மாதத்தில் இந்த திட்டங்களை முடிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு என்ன தேவை?’

    இந்த கேள்விக்கு செயலாளர் பாசிடிவாக ரெஸ்பாண்ட் செய்து, தன் தேவைகளை பட்டியல் போட்டால், மோடி தலையாட்டி ‘அப்படியே ஆகட்டும்’ என்பாராம்.

    ‘ஆறு மாதமா? அதெல்லாம் சாத்தியமில்லை, ஸார்...’ என்று செயலாளர் சொன்னார் என்றால், மோடி வேறு பக்கம் திரும்பி, ‘ சரி, நான் வேறு ஆளை போட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஏதாவது டெப்யூடேஷனில் போகலாம்’ என்று கூலாக சொல்லி திடுக்கிட வைப்பாராம்.

    ஆணவம், அகங்காரம், கர்வம், அகந்தை. எந்த பெயரை வேண்டுமானாலும் வையுங்கள். மோடியிடம் அது இருப்பது உண்மை. அவர் சொல்லும் ஐடியா சரியாக வராது என்று சொல்லிவிட்டு யாரும் தப்ப முடியாது. ’முடியாது என்று சொல்ல எனக்கு ஆள் தேவையில்லை. நீங்கள் வெளியேறலாம்’ என்று தயவு தாட்சண்யம் பார்க்காமல் முகத்துக்கு நேராக சொல்லி விடுவாராம். அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.

    கவலையே படாமல் மோடியின் கருத்தை தள்ளிவைக்கும் அதிகாரிகள் உண்டு. ’வேறு ஒரு வழி இருக்கிறது, சீயெம் சார். அது இன்னும் சுலபம். செலவு கம்மி. சீக்கிரமாக முடிக்கலாம்’ என்று அதிகாரி சொன்னால், ‘சொல்லுங்கள், கேட்போம்’ என்பார். மாற்று ஐடியா பிடித்துவிட்டால், ‘பிரமாதம், அப்படியே செய்துவிடுங்கள்’ என்று உடனே அனுமதி வழங்குவார். நமது தமிழ் அதிகாரிகள் இந்த ரூட்டில் சென்றுதான் அவரது ஆழ்ந்த நம்பிக்கைக்கு பாத்திரம் ஆனார்கள்.

    நம்மூர் மாதிரி குஜராத்தும் மின்வெட்டு மாநிலமாகத்தான் இருந்தது. மோடிமுதல்வர் ஆனதும் ஒரு மீட்டிங்கில் ஏன் இப்படி என்று கேட்டிருக்கிறார்.

    ’நிறைய முன் திருட்டு நடக்கிறது.. உற்பத்தியும் போதவில்லை...’

    ‘எந்த தொழிற்சாலை மின்சாரம் திருடினாலும் உடனே பூட்டி சீல் வையுங்கள். அபராதம் தீட்டுங்கள். எத்தனை செல்வாக்கான தொழிலதிபர் என்றாலும் பயப்படாதீர்கள்.’

    ’அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள்... விவசாயிகளுக்கு கொடுக்கும் மின்சாரம்தான் அதிகம் திருடப்படுகிறது. அதில் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பிரச்னையாகி விடுகிறது...’

    ‘விவசாயிகளின் வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் கொடுங்கள். விவசாயத்துக்கு தினமும் சிலமணி நேரம்தானே தேவை? அதை தனி லைனில் கொடுத்தால் என்ன?’

    ‘அய்யோ, அந்தமாதிரி கொடுக்க டெக்னாலஜி இல்லையே,சார்...’

    ‘இல்லை என்றால் உருவாக்குங்கள். நீங்களெல்லாம் டெக்னாலஜி புலிகள்தானே?’

    இந்த கேள்வியுடன் கூட்டம் முடிந்தது. புது தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு மோடி ஐடியாப்படி வீட்டுக்கும் நிலத்துக்கும் தனி வழிகளில் மின்சாரம் வழங்கபடுகிறது. இந்தியா முழுவதும் அதை பின்பற்ற மத்திய அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே வரும் சூழலில் குஜராத்தில் மட்டும் சாகுபடிக்கான நிலப்பரப்பு உயர்ந்து கொண்டே வருவதன் பின்னணி இதுதான்.

    ’இதற்கு ஒரு நல்ல யோசனை என்னிடம் இருக்கிறது. ஒருவேளை அது தோல்வியில் முடிந்தால் சிபிஐ விசாரணை, தணிக்கையாளர் அறிக்கை என்று பெயர் நாறிவிடும் என்பதால் அதைசிபாரிசு செய்யவில்லை’ என ஒரு அதிகாரி சொன்னால் மோடி வேகமாக தலையசைப்பார். ’உங்கள் மனசாட்சி ஒழுங்காக இருந்தால் போதும். ரிசல்ட் தப்பானால் பரவாயில்லை. செய்யுங்கள்’என தட்டிக் கொடுப்பார். அனுமதி அளித்த பிறகு அதிகாரியின் பணியில் அவர் குறுக்கிடுவதே இல்லை. அவர் மீது வரும் புகார்களை படிக்காமலே மூட்டை கட்டிவைப்பார். கேட்டால், ‘வேண்டாதவன் ஆயிரம் எழுதி போடுவான். உண்மையிலேயே சீரியஸ் புகாராக இருந்தால் நான் ஆக்‌ஷன் எடுக்கவில்லை என்றதும் எதிர்க்கட்சிக்கு கொடுத்து பேச வைப்பான். அல்லது மீடியவை நாடுவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்பார்.

    பொதுமக்களோ தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் ஒரு கோரிக்கை மனு சம்பந்தமாக இரண்டாவது முறையாக அரசை தேடி வரக்கூடாது என்பார் மோடி. விதிகள் அனைவருக்கும் பொது. யாருக்கும் விலக்கு அளிக்க தேவையில்லை. மின்னல் வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டும். ஃபைல் தேங்கக் கூடாது. ஃபாலோ அப் குறிப்புகள் சம்பந்தப்பட்டவருக்கு மொபைல் அல்லது எமெயில் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். எல்லா தகவல் பரிமாற்றமும் மேலதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடிவதாக இருக்க வேண்டும். வாய்மொழி உத்தரவுகளை யார் பிறப்பித்தாலும் சட்டையே செய்ய வேண்டாம்... இதெல்லாம் குஜராத் அதிகாரிகள் போற்றும் மோடியின் பொன்மொழிகள்.

    அதிகாரிகள் அளவுக்கு அவரது அமைச்சர்கள் மோடியை போற்றவில்லை என்பது உண்மை. விவரம் போதாவராக இருக்கிறாரே என்று மோடியால் வர்ணிக்கப்படாத அமைச்சர்கள் கிடையாது. அப்டேட் செய்ய தவறுகிறார்கள் அல்லது அதிகாரிகளை அடியோடு நம்ப மறுக்கிறார்கள் என்று தனது அமைச்சர்களை பற்றி மோடி நெருக்கமான ஒரு பத்திரிகையாளரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். இதனாலேயே அவர் அதிகமான இலாகாக்களை தன்வசம் வைத்துள்ளார். வேறு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஃபைல்களைக்கூட கேட்டுவாங்கி, அமைச்சருக்கே தெரியாமல் முடிவுகள் எழுதி கையெழுத்திட்ட உதாரணங்களும் உண்டு.

    வளர்ச்சி என்று வரும்போது எல்லா தரப்பையும் சமமாக சந்தோஷப்படுத்த முடியாது. பலருக்கு நல்லது செய்யும்போது சிலருக்கு கஷ்டம் உண்டாவது இயல்பு. அதை பெரிதுபடுத்த கூடாது என்பது மோடியின் சித்தாந்தம். அனைவரையும் உள்ளடக்கியதுதான் உண்மையான வளர்ச்சி என்பவர்கள் இதை ஏற்பதில்லை. மோடியின் நிர்வாக அணுகுமுறை சர்வாதிகார நாட்டுக்கு பொருந்தலாம். ஜனநாயகத்தில் அது சரிவராது என்கிறார்கள் இவர்கள்.

    மோடிக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவை பார்க்கும்போது இந்தியாவுக்கு இன்றைய தேவை ஒரு ஜனநாயக சர்வாதிகாரி என்று அவர்கள் தீர்மானித்துவிட்டதாக தோன்றுகிறது.

    No comments: