ஆங்கில வழிக் கல்வியை செயல்படுத்தியுள்ள உடுமலை அரசு பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்த அரசு, தகுதியான ஆசிரியர்களையும் உடனடியாக நியமிப்பது அவசியம். உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் விரும்பினால், ஆங்கிலக்கல்வி முறையை துவக்கிக்கொள்ளலாம் என்ற மாநில அரசின் அறிவிப்பின்படி, உடுமலையில் 12, குடிமங்கலத்தில் 4 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
ஆங்கில வகுப்புகள் நடக்கும் அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் ஆசிரியர்கள் இல்லாததால், ஆங்கில வகுப்புகள் மட்டுமின்றி அனைத்து பாட வகுப்புகளும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. பிற வகுப்புகளுக்கான ஆசிரியர்களே ஆங்கில பாடங்களையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கற்பித்தலில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்து விட்டு ஆசிரியர் கல்வி பட்டய படிப்புகளை முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களால், பெற்றோரின் நுனி நாக்கு ஆங்கில எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
பி.எட்., படிப்பில் ஆங்கிலத்தை முதன்மை பாடமாக படித்த இளநிலை பட்டதாரி ஆசிரியர்களால் மட்டுமே, மாணவர்களுக்கு முழுமையான ஆங்கில அறிவை வளர்க்க முடியும் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டே ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட்ட பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் தடைபட்டுள்ளது.
பள்ளிகள் செயல்பட துவங்கிய சில நாட்களிலேயே இதுபோன்ற பிரச்னைகள் உருவாகி இருப்பது, அரசு பள்ளிகளின் மீது பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
பெற்றோர் சிலர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே ஆங்கில கல்வி முறை செயல்படுத்தபட்டுள்ளதோ என சந்தேகிக்க வேண்டியதுள்ளது. ஆங்கில வகுப்புகளில் ஆர்வமுடன் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர் பற்றாக்குறையால் வகுப்புகள் தடைபட்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் போதுமான எண்ணிக்கையில், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விரைவில் நியமனம்
இது குறித்து உடுமலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "ஆங்கில வகுப்புகள் நடத்த, பிற ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விபரங்கள், கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment