தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் இயற்பியல் பாடத்தில் வெறும் 36 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றிருந்தனர். இந்த ஆண்டில் 2,710 மாணவ, மாணவியர் 200 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். அதே போல், கணிதத்தில் 3,882 பேர் சென்டம் எடுத்துள்ளனர்.
ஆனாலும், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் இல்லை. தேசிய கல்வி நிறுவனங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்கள் மிகவும் குறைவு. கடந்த ஆண்டில் என்இஇடி எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 6.58 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 3.66 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 25,549 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 22,073 பேர் தேர்வு எழுதினர். ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 11,019 பேர் மட்டும்தான். தமிழகத்தில் பள்ளி கல்வி திட்டம் தரமிக்கதாக இல்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.
நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே எல்லா வாய்ப்புகளையும் தட்டிச் செல்கிறார்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதான் தொழிற்கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல், வசதி படைத்த மாணவர்களே மெட்ரிக் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெறுகிறார்கள் என்பதால்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் நோக்கம், கிராமப்புற ஏழை மாணவர்களும் வசதி படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக கல்வியறிவு பெற வேண்டுமென்பதுதான். ஆனால், அந்த நோக்கம் நிறைவேறுகிறதோ, இல்லையோ, கல்வித் தரம் குறைந்து வருகிறது. அதே போல், தற்போது பள்ளிகளில் ‘தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை(சிசிஇ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் எழுத்தறிவுத் திறன் மேலும் குறைந்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்தும், கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் கல்வி துறை ஆய்வு செய்ய வேண்டும். கல்வியாளர்கள் குழு அமைத்து ஆய்வு செய்யும் போது அதில் கண்டிப்பாக ஆசிரியர்களும் இடம் பெற வேண்டும்
No comments:
Post a Comment