பள்ளி வாகனம் எரிந்த சம்பவம், பள்ளி வாகன பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. விபத்துகளை தடுக்க வாகன ஆய்வை முறைப்படுத்துவதோடு, ஓட்டுனர்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
பள்ளி வாகனங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்க அவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை போக்குவரத்து துறையின் கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு செய்கின்றன. படிக்கட்டு, அவசரகால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுபாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு, ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு, பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் சாத்தங்குடி புல்லமுத்தூர் இடையே பள்ளி மாணவர்களுடன் சென்ற வாகனம் தீ விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆய்வு பணியை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சம்பவத்தில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மின் கம்பிகளில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற நேரத்தில், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் இருந்து செல்லும், மின் கம்பியை உடனடியாக துண்டித்திட வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் வாகனம் எரியாமல் தடுத்து விட முடியும். இது சில ஓட்டுனர்களுக்கு தெரியவில்லை. அடுத்தக்கட்ட ஆய்வில், ஓட்டுனர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் கூறியதாவது: பள்ளி வாகனத்தை இயக்குவோர் ஐந்து ஆண்டு அனுபவம் பெற்றவராக இருப்பது முக்கியமல்ல. அவர் பொறுப்பை உணர்ந்து, சரியான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும். விபத்து நேரத்தில் செயல்படும் விதம் குறித்து ஓட்டுனர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. பள்ளிகளில் நியமிக்கப்பட்ட போக்குவரத்து குழுவை அவ்வப்போது கூட்டி, பயிற்சி வகுப்பு நடத்த வேண்டியது அவசியம். மாற்று ஓட்டுனருக்கும் இந்த பயிற்சி சென்றடைய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
கண்காணிக்கப்படுமா 4,772 வாகனங்கள்?
தமிழகத்தில், கடந்தாண்டு 18,786 பள்ளி வாகனங்கள் இருந்தன. தற்போதைய கணக்கீட்டில் மொத்தம் 21,577 வாகனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 16,805 வாகனங்களில் ஆய்வு முடிந்துள்ளது. 15,344 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன. பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடுள்ள 1,461 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் மறுக்கப்பட்டன. மீதம் 4,772 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரவில்லை. இந்த வாகனங்களை இயக்க அனுமதி மறுத்தப் போதிலும், அவை இயக்கப்படுகிறதா என்ற ஆய்வை போக்குவரத்து கண்காணிப்பு குழுக்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment