அதிகாரிகள் தவறால் பணி நிரந்தரம் மறுக்கப்பட்டதாக தொழில்கல்வி ஆசிரியர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
சக்திவேல் தனது மனுவில், கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தொழில்கல்வி ஆசிரியராக 2000-ஆம் ஆண்டு ஜன. 7-இல் நியமிக்கப்பட்டேன். 2007-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில், 1996 செப். 20 முதல் 2000-ஆம் ஆண்டு ஜூன் 1 வரையில் பெறறோர் ஆசிரியர் கழகங்கள் நியமித்த தொழில்கல்வி ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களில் நியமிக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், எனது பணி நியமன தேதியை 2000-ஆம் ஆண்டு டிச. 1 என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் தவறாக குறிப்பிட்டதால் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பியும், பள்ளிக் கல்வித்துறை செயலர் மூலம் கடிதம் அனுப்பியும் பிழையைத் திருத்த பள்ளிக்கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இவ்வழக்கு விசாரணையில் தவறு நடந்திருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இருந்தபோதும் எனது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment