கல்வி எந்த காலத்திலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்றவை புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஓவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தேவைப்பாடும் நாட்டிற்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபட்டே காணப்படுகிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் கற்றுக்கொடுக்கப்படும் கல்வி அடுத்த தலைமுறையை வளர்ச்சியை நோக்கி அழைத்துச்செல்வதற்கு பயன்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் கற்பிக்காதபொழுது அந்தத் தலைமுறையோடு அது சார்ந்துள்ள சமூகம், நாடு என அனைத்தும் வீழ்ச்சியுறுகிறது. எனவே கல்வி என்பது கற்றல் என்ற ஒன்று மட்டும் அல்ல மாறாக பண்பாடு, மரபு, இயற்கை, உடல்நலம், காலநிலை, உணவு, சுற்றுச்சூழல் என அனைத்தையும் உள்ளடக்கமாகக்கொண்டது.
இப்படிப்பட்ட கல்வி எப்படி அமைய வேண்டும்?
ஆராய்ச்சி சிந்தனை
கற்றதனால் விளைந்த பயன்கள், ஏற்பட்ட தீமைகள், வெற்றிகரமாக அமையாதத் திட்டங்கள், கடந்த காலத்தின் நிலை, நிகழ்காலத்தின் எதிர்பார்ப்புகள், எதிர்காலத்தில் தேவைப்படும் கற்றல் திட்டங்கள் என கற்றல் குறித்த தீவிர ஆராய்சியானது அவசியமானதாக இருக்கிறது. கல்வியானது ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆய்வுகளில் ஈடுபடும்பொழுதுதான் வளர்ச்சி அனைத்துத் தரப்புகளிலும் ஏற்படுகிறது.
அனுபவம் சார்ந்த அறிவு
கல்வியை புத்தகத்தில் மட்டும் கற்க முடியாது. புத்தகத்தில் இருந்து மட்டும் கற்கும் கல்வியால் செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த முடியாது. அனுபவம் என்பது மிகவும் அவசியமும், அத்தியாவசியமானதுமாக இருக்கிறது. தொடர் பயிற்சிகள் மட்டுமே செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. புத்தக அனுபவத்திற்கும், பயிற்சி அனுபவத்திற்கும் மிகவும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது. நடைமுறை என்பது அதிக நேரம், உடலுழைப்பு, முடிவெடுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.
தொடர்பு
கற்றல் தனியாக ஏதோ ஒன்றிலிருந்து வந்தது அல்ல. ஒன்றிலிருந்து ஒன்றாக கேள்விகள் சங்கிலிப் பிணைப்புகளாகவே தொடர்கின்றன. கேள்விகளுக்கான விடைகளும் தனியாக ஏதோ ஒன்றிலிருந்து வருவதில்லை ஒன்றின் தொடர்ச்சியாகவே வருகிறது. ஒன்றோடு ஒன்று தொடர்புப் படுத்திப் பார்ப்பது என்பது விவாதங்களை உருவாக்கும். விவாதங்கள் புதிய கருத்துக்களுக்கான விடைகளை அளிக்கும்.
கேள்வித்திறன்
கேள்விகள் பிறக்கும்பொழுதுதான் தேடுதல் நிறைவடைகிறது. கேள்விகள் கேட்காமல் கல்வி முழுமையடையாது. கேள்வித்திறனே விடைகளைக் கண்டுகொள்வதற்கான தேடலின் முதல் படி.
புத்தாக்க சிந்தனை
புதியவற்றை உருவாக்குவதற்கான சிந்தனைகள் உருவாக வேண்டும். எப்போதும் இருப்பது போன்ற நிலையே தொடர வேண்டும் என்பது உணவு, உடற்பயிற்சி, பண்பாடு, சுற்றுச்சூழல் போன்றவற்றுக்கு மட்டும் பொருந்தலாம். ஆனால் மற்ற அனைத்திற்கும் புதிய சிந்தனைகள், மாற்றங்கள் தேவைப்படுகிறது. பழைய நிலையே தொடர வெண்டும் என்பது வளர்ச்சிக்கான தடையாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.
தொழில்நுட்ப அறிவு
சக்கரம் கண்டுபிடித்ததில் உருவான தொழில்நுட்ப வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து கடந்த நூற்றாண்டின் இறுதியில் மாபெரும் மாற்றங்களை மக்கள் வாழ்க்கை முறையில் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் கடந்து செல்கிறது. எனவே மிக அதிகமான தொழில்நுட்ப அறிவு தேவையில்லை என்றாலும், அடிப்படையான தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது.
பிரச்சனைகளுக்கு தீர்வு காணல்
தற்பொழுது உலகம் முழுவதும் சிறந்து விளங்கும் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் "பிராப்ளம் சால்வ்டு" எனப்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முறையை ஊக்கப்படுத்தும் வகையில் பாடங்களை வழங்குகின்றன. எந்த ஒரு சூழ்நிலையிலும் கலங்காமல் நிதானமாக முடிவெடுக்கும் திறனை அதிகப்படுத்தும் வகையில் கற்றுத்தருவது எதிர்கால வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை.
சுய ஆளுமை
தனிமனிதன் தன்னை சிறப்பாக நிர்வகிப்பதே, பொது நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவும் அடிப்படைத் திறன் ஆகும். கற்கும் கல்வி ஆளுமையை வளர்க்க துணை புரிய வேண்டும். அந்த ஆளுமை நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் செல்வதற்கு உதவும்.
No comments:
Post a Comment