'நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க, மே, 7ல், 'நீட்' தேர்வு நடக்கிறது.
இதற்கான விண்ணப்ப பதிவு, ஜன., 31ல் துவங்கி, மார்ச், 1ல் முடிந்தது. ஆனால், தமிழகத்தில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவே உள்ளனர்,'' என்றார். 'தேர்வு உண்டா' என, தெரியாததால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். எனவே, தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு, விலக்கு கிடைக்காதோ என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதில், தெளிவான நிலை தெரிந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்றும், பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.
No comments:
Post a Comment