பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை ; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை புதுப்பித்து, மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, பிளஸ் 2 பாடத்திட்டம் புதுப்பிக்கப்படவில்லை.
கடந்த, 2014ல் அமைக்கப்பட்ட பாடத்திட்ட கமிட்டி, இதற்கானப் பணிகளை துவங்கியது; அப்போதைய முதல்வர் ஜெ., பார்வைக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், துறைச் செயலர் மற்றும் உயரதிகாரிகளின் ஆர்வமின்மையால், முடிவெடுப்பது தள்ளிப்போனது.
கல்வி அமைச்சராக, பாண்டியராஜன் பொறுப்பேற்றதும், இதற்கான பணிகளை துவக்கினார். அடுத்தடுத்து வந்த அரசியல் குழப்பத்தால், கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்று, ”அடுத்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும்,” என்றார்.
ஆனால், ’குறுகிய காலத்தில், புதிய பாட திட்டங்களை கொண்டு வருவது சாத்தியமற்றது’ என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
புதிய பாடத்திட்டத்தில், தமிழக அரசு தரப்பில் முடிவெடுக்க, தயக்கம் காட்டப்படுகிறது. பாடத்திட்டம் தயாரிப்புக்கு, விரிவான ஆலோசனை தேவை. அதன்பின்னரே, புதிய புத்தகங்களை அச்சிட முடியும்.
பொதுத்தேர்வுக்கு பின், ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருக்கும். வினாத்தாள் திருத்தவே, சரியாக இருக்கும். குறுகிய காலத்தில், புதிய பாடத் திட்டத்தை, தயாரிப்பதற்கு வாய்ப்புக் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment