கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், 18 ஆயிரத்து 670 பேருக்கு, நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் மூலம், கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும், பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இன்று (மார்ச் 2ம் தேதி) துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன், தேர்வுகள் நிறைவடைகின்றன.
கோவை மாவட்டத்தில், 346 பள்ளிகளில் இருந்து, 38 ஆயிரத்து 218 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வை 519 பள்ளிகளில் இருந்து, 42 ஆயிரத்து 506 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இவர்கள், பயம், பதற்றம், தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, சிறப்பாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில், கடந்த இரு மாதங்களாக, தேர்வு நேர கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வந்தது. இதில், 97 பள்ளிகளில் இருந்து, 18 ஆயிரத்து 670 மாணவர்கள், ஆலோசனை பெற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட நடமாடும் உளவியல் மைய நிபுணர் அருள்வடிவு கூறுகையில், ”பொதுத்தேர்வு எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு, மதிப் பெண் பெறுவதன் முக்கியத்துவம், கவன சிதறல்களை தவிர்த்தல், மன அழுத்தத்தில் இருந்து விடுபட, பொது கவுன்சிலிங் அளிப்பது வழக்கம்.
இதன்படி, மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் வழிகாட்டுதலோடு, அனைத்து தேர்வுகளிலும் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளோம்,” என்றார்.
No comments:
Post a Comment