தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு வயது உயர்த்தப்படுமா?
இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.
ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment