கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா உதுகுலா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஷோபா (வயது 42). இவரது கணவர் பெயர் சோமசேகர். இந்த நிலையில், ஷோபா நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் ஷோபாவை மீட்டு கோலாரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஷோபாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் மூளைச்சாவு அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, ஷோபாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இதுகுறித்து, தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் பெங்களூருவில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற பெங்களூரு தனியார் மருத்துவமனை டாக்டர்கள், மூளைச்சாவு அடைந்த ஷோபாவை பெங்களூரு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு வந்தனர். இங்கு ஷோபாவின் உடல் உறுப்புகள் இன்று (புதன்கிழமை) தானமாக வழங்கப்பட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment