பிளஸ் 2 மொழிப்பாடங்கள், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையோடு நிறைவடைந்தன. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான வினாத்தாள்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்ததால், கணிதம் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கான வினாத்தாள்கள் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு ஆங்கிலம் முதல் தாளை ஒரு மணி நேரத்துக்கு முன்கூட்டியே எழுதி முடித்து விட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், தமிழ் முதல் தாள், இரண்டாம் தாளும் ஆங்கிலம் இரண்டாம் தாளும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மொழிப்பாடங்கள் முடிவடைந்த நிலையில், பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களின் மீது இப்போது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
மார்ச் 18-இல் கணிதத் தேர்வும், மார்ச் 23-இல் வேதியியல் தேர்வும், மார்ச் 27-இல் இயற்பியல் தேர்வும், மார்ச் 31-இல் உயிரியல் தேர்வும் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கு குறைந்தபட்சம் 3 நாள்கள் முதல் அதிகபட்சம் 7 நாள்கள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்சமாக கணிதப் பாடத்துக்கு 7 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கணிதம், கம்ப்யூட்டர் பிரிவு மாணவர்களுக்கு கணிதப் பாடத்துக்கு 4 நாள்கள் விடுமுறை உள்ளது.
""விடுமுறை இருந்தால் மாணவர்கள் தேர்வுக்கு நன்றாகப் படிக்கலாம் என்பது பொதுவான கருத்துதான். ஆனால், அதிக நாள்கள் விடுமுறை இருக்கிறது என்கிற எண்ணத்திலேயே பெரும்பாலான மாணவர்கள் படிக்காமல் நேரத்தை வீணடித்து விடுகின்றனர்'' என புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் கூறும்போது, ""ஒவ்வோர் ஆண்டும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் வினாக்கள் எளிமையாக உள்ளன. ஆனால், கணிதப் பாடத்தில் 10 மதிப்பெண், 6 மதிப்பெண் வினாக்கள் கடினமானவையாகவே உள்ளன. இதனால், மாணவர்கள் மனதளவில் கலக்கமடைந்து தேர்வையே முழுமையாக எழுதுவதில்லை'' என்றார்.
""இந்த ஆண்டு கணிதப் பாடத்துக்கு அதிக நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், முக்கியத் தேர்வுகளுக்கு 2, 3 நாள்கள் விடுமுறை இருந்தாலே போதுமானது. கணிதப் பாடத்தைப் பொருத்தவரை மாணவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த கணிதப் பாடங்களையும், தாங்கள் அதிகம் கவனம் செலுத்தாத பகுதிகளையும் விடுமுறை நாள்களில் போட்டுப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், இயற்பியல், வேதியியல் தேர்வுகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டு எளிமையாக இருந்தாலும், இந்த ஆண்டு மாணவர்கள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காப்பியடித்த 15 பேர் சிக்கினர்:
ஆங்கிலம் இரண்டாம் தாளில் காப்பியடித்த 15 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சிக்கினர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 தனித்தேர்வர்கள் காப்பியடித்ததாகப் பிடிபட்டனர்.
No comments:
Post a Comment