கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வறையில் மாணவிக்கு தொல்லை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, தேர்வு மைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
முதல் நாள் தேர்வின்போது, இந்த மையத்தில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு எழுதினார். இந்த மாணவியிடம் தேர்வு அறைக் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் ஜாம்சன் சில்மிஷம் செய்தாராம். இதுகுறித்து, அந்த மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி திங்கள்கிழமைக்குள் (மார்ச் 9) அறிக்கை தருமாறு முதன்மை கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, புகார் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியாற்றிய அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் அவரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
புகார் குறித்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி ஜேக்கப் அருள்மாணிக்கம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது புகாருக்குள்ளான ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்ததும் அவர் மீது கல்வித் துறை சார்பில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியவை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment