நேரடி மானிய திட்டதில் சேராதவர்களுக்கு ஏப்ரல் 1–ந் தேதி முதல் மானியம் இல்லாமல் தான் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்று இன்டேன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் கியாஸ் ஆகிய 3 நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.
வங்கி கணக்கில் நேரடியாக மானியம் பெறும் திட்டத்திற்காக சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன. வரும் 31–ந் தேதி இந்த திட்டத்தில் சேர்வதற்கு கடைசிநாளாகும். அதற்கு பிறகு அனைவருக்கும் மானியம் இல்லாமல் சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட உள்ளது.இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல அலுவலகத்தின் செய்தித் தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:–
84 சதவீதம் பேர் இணைப்பு
இந்தியன் ஆயில் நிறுவனம் 619 ஏஜென்சிகள் மூலம் ஒரு கோடி வாடிக்கையாளர்களை கையாண்டு வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நேற்று வரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (இன்டேன்) 83.25 சதவீதம், பாரத் கியாஸ் நிறுவனத்தில் 79.45 சதவீதம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 83.56 சதவீதம்வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.சராசரியாக 16 முதல் 18 சதவீதம் வரை பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தில்சேரவில்லை. இவர்களுக்கு வரும் 31–ந் தேதிக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டர்களே விற்பனை செய்யப்படும். அதற்கு பிறகு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 3 மாதங்களுக்கான மானிய தொகை சேர்த்து ஒரே தவணையாக போடப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு மானியம் பெற முடியாது.
சிலிண்டர் தட்டுப்பாடு
இன்டேன் நிறுவனத்தை பொறுத்தவரையில் சுமார் 84 சதவீதம் பேர் சேர்க்கப்பட்டுவிட்டதால், கியாஸ் ஏஜென்சிகள் கியாஸ் நிரப்பும் மையங்களில் மானியம் சேர்க்கப்படாத விலையில் அதாவது சந்தைவிலையிலான சிலிண்டர்களை தான் அதிகம் வாங்கி வினியோகிக்கின்றனர். ஆனால் இந்த திட்டத்தில் சேராமல் இருக்கும் 16 சதவீதம் பேர் தான் மானியம் சேர்க்கப்பட்ட சிலிண்டர்களை வாங்குகின்றனர்.இதனால் இந்த வகை சிலிண்டர்கள் குறைவான விற்பனை என்பதால், கியாஸ் ஏஜென்சிகள் குறைந்த எண்ணிக்கையில் வாங்கி வினியோகிக்கின்றனர். இதனால் மானியம் சேர்க்கப்பட்ட சிலிண்டர்கள் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1–ந் தேதி முதல் அனைவருக்கும் மானியம் சேர்க்கப்படாத சந்தைவிலையிலான சிலிண்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் தட்டுப்பாடு பிரச்சினையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இருக்காது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் 1800233 555 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.புதிதாக கியாஸ் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று கோரி மனு அளித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment