ஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2002ம் ஆண்டு முதல் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் அமலில் உள்ளது. மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்ப்பது, பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பது, புதிய வகுப்பறை கட்டும் பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இத்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிகமாக இருப்பதாக கூறி 10 பள்ளிகளுக்கு ஓர் ஆசிரியர் பயிற்றுனர் (10:1) இருந்தால் போதும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டு 600 'சர்பிளஸ்' ஆசிரியர்
பயிற்றுனர்கள் பிற மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஆவணங்கள் மட்டும் அவர்கள் பணியாற்றிய பழைய மாவட்டத்திற்கே 'மாற்றுப் பணி' என்ற பெயரில் 'பேப்பர் டிரான்ஸ்பர்கள்' செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் மதுரையில் மட்டும் 50பேருக்கு இந்த மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர் கூறுகையில் "ஏற்கனவே எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் 'சர்பிளஸ்' என்ற பெயரில் ஏழு மாதங்களுக்கு முன் எங்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றினர். ஆனால் தற்போது 'நிர்வாக காரணம்' எனக் கூறி எங்கள்
ஆவணங்களை மட்டும் பழைய மாவட்டத்திற்கே மாற்றியுள்ளனர். வேலை ஓரிடம், சம்பளம் பெறுவது வேறு மாவட்டமா. இதனால் நகர் ஈட்டுப்படி, வீட்டு வாடகை படி போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது 'கவுன்சிலிங்'கில் பங்கேற்புக்கான 'சீனியாரிட்டி' பாதிக்க வாய்ப்புள்ளது" என்றனர்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருசில மாவட்டங்களுக்கு திட்ட பட்ஜெட் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. அந்த மாவட்டத்திற்கே ஜூனில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. முன்பு பணியாற்றிய மாவட்டத்தில் அவர்களுக்கு சம்பளம் உள்ளது. ஜன., பிப்., மற்றும் மார்ச் சம்பளம் பழைய மாவட்டத்தில் தான் வழங்கப்படும். இதற்காக தான் அவர்களின் ஆவணங்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.
மார்ச்க்கு பின் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
No comments:
Post a Comment