"மாணவர்கள் மத்தியில், சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், மஞ்சுதளா கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்தது.
அங்குள்ள கோவில் வளாகம், சமுதாய கூடம் சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீர் தொட்டியை சுற்றி வளர்ந்திருந்த செடி, கொடி, குப்பைகள் அகற்றப்பட்டன. தொடர்ச்சியாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ராஜூ, குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, வீட்டுக்கு ஒரு கழிப்பறை, சுத்தமான குடிநீர், மழைநீர் சேகரிப்பு, ஓட்டளிப்பதன் அவசியம் போன்ற தலைப்புகளில், கிராம மக்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, ஊர் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் லெனின் தலைமை வகித்து பேசுகையில், "கிராம மக்களுடன் கலந்து, அவர்களின் பிரச்னைகளை அறிந்து, அவர்களுக்காக சேவை செய்யும் நோக்கில்தான், என்.எஸ்.எஸ்., திட்டம் துவங்கப்பட்டது. மாணவர்களின் சேவையை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேநேரம், மாணவர்களும் தங்களது சேவை செய்யும் உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும்" என்றார்.
பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ், முகாம் அறிக்கையை வாசித்தார். முகாமில் பங்கேற்ற, 30 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment