சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகள் இருபால் மாணவரும் படிக்கும் இடமாக இருந்தது .மாணவ ,மாணவியரிடம் இருவருக்கும் ஈர்ப்பு சாதாரணமாக பார்க்கப்பட்டது .தினம் தினம் பார்த்து பழகி போவதால் ஆண்கள் மீது மிகப்பெரிய அளவில் பெண் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதில்லை .இது போலவே தான் ஆண் பிள்ளைகளும் !
ஆனால் இப்போது ஆண்கள் பள்ளி ,பெண்கள் பள்ளி என்று தனித்தனியே இருப்பதால் ஆண்கள் பள்ளியில் ஒரு பெண் நுழைந்து விட்டால் போதும் ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல இந்த பிள்ளைகள் பார்ப்பதும் ,அதுபோலவே பெண்கள் மட்டும் பயிலும் பள்ளிகளில் ஆண் பிள்ளைகள் வந்துவிட்டால் பெண் பிள்ளைகள் தங்களுக்குள் கிசுகிசுப்பதும் தவிர்க்கமுடியாத காட்சியாகி விட்டது .
அதுமட்டுமின்றி ஆண்கள் பள்ளியில் தற்போது ஆண் ஆசிரியர்கள் மட்டும் பணியமர்த்தப்படுகின்றனர் .அதை போலவே பெண் ஆசிரியைகள் பெண்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்படுகின்றனர் .காரணம் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக என்று கூறப்படுகிறது .ஆனால் இது பிரச்சனையை இன்னும் தீவிரமாக்குமே தவிர குறைக்கும் வாய்ப்பு இல்லை .மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான் இது !
குழந்தை பிறந்ததும் சில ஆண்டுகளுக்கு தன் தாய் தந்தையை ஹீரோ ஹீரோயின் ஆக பார்க்கிறது .அதுவே வளர்ந்து பரந்த இந்த சமுதாயத்தில் தனியே விடப்படும்போது அது பார்க்கும் அடுத்த ஹீரோ ஆசிரியர் தான் ;ஹீரோயின் ஆசிரியை !'
பள்ளி என்பது ஒரு சிறிய சமுதாயம் .அந்த சமுதாயத்தில் தன் ஹீரோ ஹீரோயினை தேடும் குழந்தைக்கு அது கிடைக்கும் போது அதை அது கற்கிறது ,தொடர்கிறது .அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காத போது அது அதற்கு அடுத்த இடத்தில் தனக்கான கதாநாயகனை தேடுகிறது .உடனடியாக கண்ணில் படுவது சினிமா !அங்கே அக்குழந்தை தன்னை கவரும் ஹீரோவை தனக்கு முன்மாதிரியாக கொண்டு பின்பற்ற தொடங்குகிறது .சினிமா என்ற மாய உலகம் நிஜத்தை விட நிழலையே அதிகம் கற்பிக்கிறது .
ஆணும் ,பெண்ணும் இணைந்து பயிலும் ,ஆண் ஆசிரியர்களும் பெண் ஆசிர்யர்களும் இணைந்து கற்பிக்கும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்களை அறியாமலேயே நெருங்கி பழக ,பின் தொடர நல்ல நண்பர்களும் ,ஆசிரியர்களும் தோழிகளும் கிடைப்பர் .அனைத்துக்கும் மேலாக ஒரு அன்னையாக ,தோழியாக ,வழிகாட்டியாக ஆண் பிள்ளைகள் பெண் ஆசிரியர்களை மிக எளிதாக ஏற்றுக்கொள்வர் .அதை போலவே பெண் குழந்தைகள் தங்கள் ஆண் ஆசிரியர்களை ஏற்பர் .ஆனால் தற்போதைய நிலையில் ஆண் பெண் குழந்தைகள் இணைந்து பழக வாய்ப்பு மறுக்கப்படுவதோடு சுமார் 5 ஆண்டு காலத்துக்கு முக்கியமாக ஆண் , பெண் பாலுணர்வு வளரும் பருவத்தில் .எதிர்ப்பாலினரை பற்றி அறியும் ஆர்வம் மிகுதியாக இருக்கும் பருவத்தில் அது முற்றிலுமாக மறுக்கப்படும் போது , அது தேவையற்ற மன சலனங்களையே அதிகரிக்கிறது .
அது மட்டுமின்றி ஆண் ஆசிரியர்களே இல்லாத பள்ளியில் பயிலும் பெண் குழந்தை ஒரு ஆணின் குணநலன்களை நேரில் பார்த்து பழகும் வாய்ப்பை இழக்கிறது .இது ஆண் குழந்தைக்கும் பொருந்தும் .சுமார் 6ஆண்டு காலமாவது ஆண், பெண் வேறுபாடுகள் இன்றி பழகும் வாய்ப்பு இருவருக்கும் வழங்கப்பட வேண்டும் .அப்போது தான் இரு பாலருக்கும் நல்ல புரிதல் உண்டாகும் .எதிர் காலத்தில் பணி புரியும் இடத்தில ,இல்லத்தில் என்று எல்லா இடங்களிலும் சிக்கல் இன்றி இருக்க முடியும்
கருத்துரை :
திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.
Vijayalakshmi Raja
No comments:
Post a Comment