'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மணிவாசகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, மாநில தலைவர் மணிவாசகன் கூறியதாவது:கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்குவது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் தேர்வுத்துறை இயக்குனருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்கான முன்மொழிவுகளை தயார் செய்து, அரசுக்கு அனுப்ப, தேர்வுத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வுப்பணிகளுக்கான உழைப்பூதியம் உயர்த்தப்படாவிட்டால், பிளஸ் 2 வகுப்புக்கு நடக்க உள்ள செய்முறை மற்றும் கருத்தியல் (தியரி) தேர்வுகளை முற்றிலும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அரையாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வு கூட்டங்களில், மாணவர்களின் அடிப்படை பிரச்னையை புரிந்து கொள்ளாமல், தேர்ச்சி சதவீதம் உயர்த்துவது பற்றியே, முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்ச்சி சம்பந்தமாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் போதும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் போதும், பிற மாணவர்களின் முன்னால் கேலி செய்து, மட்டம் தட்டுவதாக நினைத்து, மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
இதனால், ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தேர்ச்சி சதவீதம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நடத்தப்படும் மீளாய்வு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment