மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணம் தொடர்கிறது. இதை தடுப்பதற்கு போலீசார், பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை அவசியம்.
கிராமங்கள் நிறைந்தது தேனி மாவட்டம். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு விலையில்லா பாடப் புத்தகம், இலவச பஸ் பாஸ் உட்பட 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வருகின்றனர்.
எட்டாம் வகுப்புக்கு மேல் வந்து விட்டால் சில மாணவர்கள், தங்களை ஒரு ஹீரோவாக நினைத்துக்கொண்டு படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் பஸ்சில் ஏறுவது, இறங்குவது, பஸ்களின் சீட்களின் பின்புறம் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கவிதை எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, அதிகளவில் படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர்.
அரசு பஸ்களில் கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வர அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், சில மாணவர்கள் இந்த வாய்ப்பை, தங்கள் உயிரைப் போக்குவதற்கு பயன்படுத்துகின்றனர். டவுன் பஸ்கள், மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளன. பஸ் படிக்கட்டுகள் ஓர் அளவிற்கு மேல் பாரம் தாங்காது.
மேடு பள்ளங்கள், வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போது படியில் தொங்கி வரும் மாணவர்கள் சிறிது தவறி கீழே விழுந்தாலும் பெரும் விபத்து நிகழ்ந்து விடும். இதை யாராலும் ஈடுகட்ட முடியாது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் உப்புக்கோட்டை, வீரபாண்டி உள்ளிட்ட பல ஊர்களில், படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் இது போன்ற படிக்கட்டு பயணங்களை காண முடியாது. ஆண்டு தோறும் போலீசார், போக்குவரத்து துறையினர் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பல நடவடிக்கை எடுத்தாலும், இந்த பயணம் தொடர்கிறது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேனி, போடி, சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கிராமங்களுக்கு சென்று வரும் பஸ்களில் காலை, மாலை பள்ளி நேரங்களில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது. காலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, கண்டக்டர் டிக்கெட் கொடுப்பதே பெரும் சிரமம். அந்த நேரத்தில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை தட்டிக் கேட்டால், தகராறில் முடிகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இதை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர்.
இது குறித்து கண்டக்டர்கள் கூறியதாவது: நாங்கள் மாணவர்களிடம் பல முறை சொல்லி பார்போம். கெஞ்சியும் பார்போம். கோபப்பட்டு சொன்னால் தகராறில் முடிவடையும். தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். படிக்கட்டு பயணத்தில் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் கண்டக்டரும், டிரைவரும் மாதக்கணக்கில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இந்த பயத்தில் நாங்கள் பஸ் ஓட்டுகிறோம். இது மாணவர்களுக்கு தெரியாது. என்ன செய்வது எங்கள் வேலை இப்படி இருக்கு என்றனர்.
விழிப்புணர்வு அவசியம்
படிப்பிலும், விளையாட்டிலும் தங்கள் திறமையை காட்டினால் மட்டும் பிற்காலத்தில் ஜெயிக்க முடியும், என்ற கருத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள், போலீசார் இணைந்து சில நேரங்களில் அதிரடி சோதனை நடத்தி, படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தானாக திருந்தவேண்டும். இது போன்ற செயல்களால் தான் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment