Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 7, 2013

    தேவை இலவசக் கல்வி, இலவசத் தேர்ச்சியல்ல!

    கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன். "ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் திருச்சியில் புதன்கிழமை
    நடைபெற்ற தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்க நிறைவு விழாவில் அவரது நிறைவுரை:

    ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியை ஏன் புத்தகமாகக் கொண்டுவரக் கூடாது என்று பலரும் கேட்கின்றனர். அது புத்தகமானால், தமிழாசிரியர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே பயன்படும். இப்போது நாளிதழின் ஒரு பக்கமாக இருப்பதால் சராசரி வாசகர்களுக்கும் தமிழ் இலக்கியம் பற்றிய ஆர்வம் ஏற்படவும், தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் சென்றடையவும், நடைமுறைத் தமிழ் வளர்ச்சி அடையவும் வழிகோலுகிறது.

    உலகம் ஏற்றுக் கொள்ளும் கோட்பாடாகத் தமிழ் இலக்கியங்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகுக்கு உரத்துச் சொன்ன ஒரு கோட்பாடு நம் சங்கத் தமிழில்தான் இருக்கிறது. கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பல காவியங்கள் உண்டு. ஆனால், சங்கத் தமிழ்ப் பாடல் ஒவ்வொன்றும் ஒரு காவியம். ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலும் ஒரு காவியமல்லவா?

    ஏனைய மொழிகளில் காண முடியாதவை பல நம்மிடம் உள்ளன. ஆனால், நாம் அவற்றைப் பிற மொழிகளுக்குப் பெயர்க்கவில்லை. எடுத்துச் சொல்லவில்லை. நமக்குள்ளே பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதை பிற மொழியினருக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம்.

    "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்' என்ற பாரதியின் கூற்றில் எனக்குக் கருத்து மாறுபாடு உண்டு. நமது தேவை தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ளவற்றை பிற மொழிகளில் பெயர்க்க வேண்டும் என்பதுதான்.

    ஒப்பிலக்கியம் பற்றிய பயிலரங்கம் இது. இதில் கலந்து கொள்ளும் எத்தனை பேருக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும்? ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்த எத்தனை பேர் தமிழாசிரியர்களாக இருக்கிறார்கள்? நம் மொழி, பண்பாட்டின் அருமை, பெருமைகளை உலக மொழிகளில் பெயர்க்க வேண்டும். ஆனால், இங்கு ஆங்கிலம் படித்துவிட்டால் உடனே தமிழாசிரியர் பணியை விட்டு ஆங்கில ஆசிரியராகிவிடுகிறார்கள்.

    ஆங்கிலம் என்றில்லை, சம்ஸ்கிருதம், மலையாளம், ஒரியா, லத்தீன், அரபி, பிரெஞ்சு, சீனம் என ஏதோவொரு மொழியை தமிழாசிரியர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழிலுள்ள கருத்துகளை அந்த மொழிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத தலைமுறையை நாம் உருவாக்கி வருகிறோம். இதற்கு வருங்காலம் யாரைக் குறை சொல்லும் தெரியுமா? அரசையா? பெற்றோரையா? இல்லை. இந்தப் பழி ஆசிரியர்களைத்தான் வந்துசேரும்.

    ஆசிரியர்கள் நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய புதிய செய்திகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலைநாடுகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் தகுதி பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு முறை பணி கிடைத்துவிட்டால் போதும், அரசுப் பணி- நிரந்தர வருவாய் போதும் என்ற மனநிலை வந்துவிடுகிறது. ஏதோ சம்பளம் கிடைத்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு சாதாரண பணியா, ஆசிரியர் பணி?

    விவசாயிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை அளிக்காத சமுதாயம் சீரழிந்து போகும். சமுதாயம் ஆசிரியர்களைத் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும். அதற்கு உகந்தவர்களாக ஆசிரியர்கள் வாழ வேண்டும்.

    இப்போதைய தொடக்கக் கல்வி முறையில், இந்தியாவில் 60 விழுக்காடு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கத் தெரியவில்லை. 9-ம் வகுப்பு ஆசிரியர்தான் அவர்களுக்கு ஆங்கில எழுத்துகளைச் சொல்லித் தருகிறார். இதற்குக் காரணம் 8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி முறைதான்.

    கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், தேர்ச்சி இலவசமாக இருக்க முடியாது. தடையில்லாத் தேர்ச்சி முறை மாணவர்களின் தரம் குறைந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். அடிப்படைக் கல்வியே சரியாக இல்லாவிட்டால், உயர்கல்வியில் தரம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?

    கவலையளிக்கும் ஒரு சூழலில், தமிழாசிரியர்கள் ஆர்வத்துடன் இந்தப் பயிலரங்கத்தில் கலந்த கொள்ள வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட முனைவர் நெடுஞ்செழியன் தம்பதியைப் போல, மாவட்டத்துக்கு ஒரு தம்பதி இருந்துவிட்டால், ஆசிரியர்கள் தரம் உயரும். கல்வியின் நிலை உயரும்'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

    No comments: