செங்கத்தில், கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவன் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டித்து, பெற்றோர், பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம், சித்தார்த் மெட்ரிக்குலேசன் பள்ளியில், செங்கம் தளவநாயக்கன்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் மகன் சஞ்சய்ராஜ், 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
கல்விக் கட்டணம், 35ஆயிரம் ரூபாயில், 20 ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்திவிட்டு மீதம் உள்ள தொகையை பிறகு செலுத்துவதாக, பள்ளி நிர்வாகத்திடம் பாலமுருகன் கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி உரிய தேதியில், அவரால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவன் சஞ்சய்ராஜிடம், பள்ளி நிர்வாகம் கல்விக் கட்டணத்தை கேட்டுள்ளனர்.
மேலும், கல்விக் கட்டணம் செலுத்தாததால், பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல், வகுப்பறையில் இருந்து, கடந்த, 6ம் தேதி மாணவனை, பள்ளி நிர்வாகம் வெளியே அனுப்பியது. இதுகுறித்து மாணவன், தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம், சஞ்சய்ராஜை பள்ளி நிர்வாத்தினர், வகுப்பறையில் சேர்க்காமல் வெளியில் நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன், தனது மனைவி ஈஸ்வரியுடன் பள்ளிக்கு சென்று, விரைவில் பள்ளி கட்டணம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் மாணவனை உள்ளே அனுமதிக்காமல், வெளியில் அனுப்பியதால், ஆத்திரமடைந்த அவர்கள், சஞ்சய்ராஜூடன், மதியம் 2 மணியளவில் பள்ளி முன் அமர்ந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். தாசில்தார் தினகரன், சித்தார்த் மெட்ரிக் பள்ளிக்கு சென்று, நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எக்காரணத்தை கொண்டும் பள்ளியில் இருந்து மாணவனை வெளியில் அனுப்பக் கூடாது. மேலும், பெற்றோருடன் சமரசம் பேசி, விரைவில் பள்ளி கட்டணம் செலுத்தும்படியும், அதுவரை பள்ளிக்கு மாணவனை அனுப்புமாறும் தெரிவித்தார். தாசில்தார் சமரசத்தை ஏற்ற பெற்றோர், சஞ்சய்ராஜூடன் வீட்டுக்குச் சென்றனர்.
No comments:
Post a Comment