பள்ளிகளில் பன்றிக் காய்ச்சல் பரவல் குறித்து பீதி நிலவுவதால், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. பன்றிக் காய்ச்சல் குறித்த தகவலால், பெற்றோர்களும், மாணவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.
"பள்ளியில் மூன்று பேருக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம்" என, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி, பெற்றோருக்கு அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., தகவலால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ள நிலையில், நாளை துவங்கும் பிளஸ் 2 தேர்வு, என்ன ஆகுமோ என, பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தொ டர்ந்து, கடந்த மூன்று மாதங்களாக, பன்றிக்காய்ச்சல் பாதிப்பும், மக்களை அச்சமூட்டி வருகிறது.
தமிழக அரசு அறிவிப்பு
பன்றிக்காய்ச்சலை தடுக்க, எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், நான்கு லட்சம் டாமிபுளூ மாத்திரைகள்; 50 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கும், இலவசமாக மாத்திரைகள் தரப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தொடர்கின்றன. பாதிப்பு, தடுப்பு பணிகள் குறித்து, அவ்வப்போது மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மூலமும் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, பெற்றோர்களுக்கு, மொபைல் போன் வழியாக, பள்ளியில், மூன்று மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளது. உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும், அனுப்பாததும் உங்கள் விருப்பம் என, எஸ்.எம்.எஸ்., தகவலை அனுப்பி உள்ளது. இதனால், பதறிய பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தவிர்த்தனர்.
சில மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். மேலும், ஒரு வாரத்திற்கு பள்ளியை மூடுவது குறித்தும், மாநகராட்சியுடன் ஆலோசித்து வருவதாவும், அந்த எஸ்.எம்.எஸ்., தகவல் தெரிவிக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 5) துவங்குகிறது. இந்த நிலையில், பள்ளிகளை மூடும் அளவுக்கு பாதிப்பு உள்ளதாக பரவிய தகவல், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்தேர்வு நடக்குமா என, பெற்றோர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
தேர்வு பாதிப்பு இல்லை: பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என, மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை கூறியதாவது: பன்றிக்காய்ச்சல் தகவல் தொடர்பாக, தனியார் பள்ளியில் என்ன நடந்தது; உண்மை என்ன என விசாரித்து, அறிக்கை தர உத்தரவிட்டுள்ளேன். பிளஸ் 2 தேர்வுகள், எந்த வகையிலும் பாதிக்காது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாதிப்பு அதிகமா?
பொது சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும், 20 ஆயிரம் பேர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,000 பேருக்கு மேல் இறந்துள்ளனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 306 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். 183 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்; 11 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு குறைவு என்றாலும், உயிர் இழப்புகள் கூடாது என்பதே தமிழக அரசின் விருப்பம். பாதிப்பு உள்ளோருக்கு, டாமிபுளூ மாத்திரை தான் தீர்வு. இவ்வாறு, அவர் கூறினார்.
தப்பிக்க என்ன வழி?
* சளி, இருமல், தொண்டை வலி, எரிச்சல், காய்ச்சல், உடல் சோர்வு, மூட்டு வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு இதன் அறிகுறிகள்.
* 65 வயதுக்கு மேற்பட்டோர், 5 வயதுக்கு கீழான குழந்தைகள், கர்ப்பிணிகளையும் தாக்க வாய்ப்புள்ளது.
* இருமும் போதும், தும்மும் போதும் காற்றில் கிருமி பரவலாம் என்பதால், துணி வைத்து மூடிக் கொள்ளலாம்.
* பொது இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது. கைகளை சோப்பு, தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
* கடைகளில் தானாக மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்த வேண்டாம். டாமிபுளூ மாத்திரை நோய் பாதிப்பை தடுக்கும் என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி அதை பயன்படுத்தக்கூடாது.
மலிவு விலையில் பன்றி காய்ச்சலுக்கு சோதனை மருந்து கண்டுபிடிப்பு
பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ள நிலையில், குறைந்த விலையில் நோய் பரிசோதனைக்கான கருவியை பெங்களூரு மருந்து நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து உள்ளது. பெங்களூருவில் உள்ள மோல்பயோ என்ற நிறுவனம் பன்றிக்காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் கருவி மற்றும் அதற்கான பரிசோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளது; இதை ஒருமுறை பயன்படுத்த 850 ரூபாய்தான் ஆகும்.
இதற்கான கருவி மற்றும் மருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை பயன்படுத்தி நோய் ஆய்வு மேற்கொள்ள அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை ஆகிறது.
பன்றிக்காய்ச்சல் நோய் இருப்பதை கண்டறிவதற்கான மருத்துவ சோதனை மருந்துகளை சுவிட்சர்லாந்தின் ரோச் மருந்து நிறுவனமும், அமெரிக்காவின் லைப் டெக்னாலஜிஸ் நிறுவனமும், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. பன்றிக்காய்ச்சலுக்கு குறைந்த விலையில், இந்திய நிறுவனம் சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ள போதிலும், அதை பயன்படுத்த ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் குறைந்த விலையில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பை கண்டறிய முடியாத நிலை காணப்படுகிறது. இந்த நோய்க்கு நாடு முழுவதும் 1,175 பேர் இறந்துள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment