சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப் பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, முதல் வகுப்புக்கு அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை அச்சிட்டு வழங்குமாறு சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகள் தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற 480 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளோடு இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பிரிவுகளைப் புதிதாகத் தொடங்க 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குத் தமிழக அரசின் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளுக்காக வரும் கல்வியாண்டில் (2015-16) தமிழ்ப் பாடப் புத்தகங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆண்டில் முதல் வகுப்புக்கு மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் கோரப்பட்டுள்ளன. அதோடு, பிற பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ் படித்து வரும் பிற வகுப்பு மாணவர்களுக்காக மேலும் சில லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் புத்தகங்களை வட்டார விநியோக மையங்களிலிருந்து எடுத்துச் செல்வதில் சில சிக்கல்கள் உள்ளதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புத்தகங்களை பார்சல் சர்வீஸ் மூலம் நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்புவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்ஸரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் வகுப்பிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பல தனியார் பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ராணுவப் பள்ளிகள் ஆகியவற்றை தவிர்த்து அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழ் அறிமுகப்படுத்தப்படும் வகுப்புகளின் விவரம்
2015-16 1
2016-17 1, 2
2017-18 1,2,3
2018-19 1,2,3,4
2019-20 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை
2020-21 1 முதல் 6-ஆம் வகுப்பு வரை
2021-22 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை
2022-23 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
2023-24 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை
2024-25 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை
No comments:
Post a Comment