Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 1, 2014

    "நேர்மறையான எண்ணங்களுடன் தேர்வுக்கு சென்றால் வெற்றி சுலபம்"


    நேர்மறையான எண்ணங்களுடன் தேர்வுக்கு சென்றால், வெற்றி சுலபம். கவனம் சிதறாமல் படித்தால் கலக்கம் இல்லை என, கோவையில் நடந்த தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.


    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, டி.வி.ஆர்., அகாடமி வழங்கும், தினமலர் - கல்வி மலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கோவை அவிநாசி ரோடு சி.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரியில், நேற்று இரண்டாம் நாளாக நடந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் மாநில அளவில், ரேங்க் பெற்ற மாணவர் ரவிசங்கருக்கு பதக்கம் வழங்கி, ஆசிரியர்கள் கவுரவித்தனர்.

    கோவை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேர்வை எளிதாக சந்திக்கும் வழிமுறைகளை விளக்கினர். பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் விளக்கங்கள் அளித்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும், முக்கிய வினாக்கள் அடங்கிய, புளூபிரிண்ட் இலவசமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்:

    அடித்தல், திருத்தல் கூடாது!

    உமாராணி (தமிழ்): தமிழ் பாடம் எழுதும் மாணவர்கள், அழகிய கையெழுத்துடன், அடித்தல், திருத்தம் இல்லாமல் எழுதினால் நல்ல மதிப்பெண் பெறலாம். முதலில், பக்க தலைப்புகள் கொடுப்பதுடன் செய்யுள் வரிகளை அடிக்கோடிட்டு காண்பிக்க வேண்டும். முதல் தாளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம். முன்னுரை, பொருளுரை, உட்தலைப்பு, முடிவுரை என்ற முறையில் விடை இடம்பெற வேண்டும். இலக்கணம் என்பது கடினமில்லை; பகுபத உறுப்பிலக்கணம், இலக்கண குறிப்பு, புணர்ச்சி ஆகிய மூன்றிலும் முழு மதிப்பெண் பெறலாம். இரண்டாம் தாளில் பத்தியாக எழுதாமல் கருத்துக்களாக பிரித்து எழுத வேண்டும். முக்கிய சொற்களை அடிக்கோடிட்டு எழுதினால் மதிப்பெண் வழங்க எளிதாக இருக்கும்.

    ஆர்வத்துடன் படியுங்க ஆங்கிலம்!

    கமலா (ஆங்கிலம்): ஆங்கிலம் என்றாலே, அரசு பள்ளி மாணவர்களின் மத்தியில் பதட்டம், பயம் நிலவுகிறது. ஆங்கிலத்தை தேர்வுக்காக அல்லாமல், எதிர்கால தேவை அறிந்து மனப்பாடம் செய்வதை காட்டிலும், ஆர்வத்துடன் படித்தல் அவசியம். நேர்மறையான எண்ணங்களுடன் தேர்வுக்கு சென்றால், ஆங்கிலம் சுலபம். பழைய கேள்வித்தாள்களை கொண்டு, மாணவர்கள் பயிற்சிகளை எடுக்கவேண்டும். பாடத்தின் பின் உள்ள கேள்விகளை நன்கு படித்துக்கொள்ளவேண்டும். புரிந்து படித்தால், எளிமையாக இருக்கும். எழுத்துப்பிழைகளை தவிர்த்து எழுதினால், மதிப்பெண்கள் அதிக அளவில் கிடைக்கும். கேள்விகள் குழப்பத்தாலும், வேறு எந்த காரணங்கள் கூறியும் விட்டுவிட்டு வரக்கூடாது. மனப்பாடம் செய்வதை விட்டு, புரிந்து படித்தால் ஆங்கிலத்தில் அசத்தலாம்.

    கவனம் இருந்தால் கலக்கம் எதற்கு?

    ரம்யா (வேதியியல்): வேதியியல் என்பது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் பாடமாகவே கருதப்படுகிறது. கவனம் சிதறாமல் படித்தால் கலக்கம் இல்லை. சமன்பாடுகள், கோட்பாடுகளை கடினமாக கருதுகின்றனர். சமன்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்ள எளிமையான முறையை கையாளவேண்டும். குறியீடுகள், எண்கள், எழுத்துக்கள் போன்றவற்றை தெளிவாக எழுதவேண்டும். கேள்விகளை சிந்தித்து, சுருக்கமாக பதில் அளிக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். பழைய கேள்வித்தாள்களை எடுத்து, பயிற்சி செய்தால், எளிதாக தேர்வை எதிர்கொள்ளலாம். தேர்வுக்கு முதல் நாளே, புதிய பகுதிகளை படிப்பதை தவிர்த்து, படித்த பகுதிகளை மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். திட்டமிட்டு, முழு ஈடுபாடுடன் படித்தால், அதிக மதிப்பெண்களை எடுக்கலாம்.

    புத்தகத்தை கரைத்து குடிங்க!

    இசைவாணி (விலங்கியல்): ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தையே முழுவதும் படித்து புரிந்து கொள்வதுடன், வினா - விடைகளை இருமுறை படித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மதிப்பெண் புத்தகத்துக்கு, பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை நன்கு படிக்க வேண்டும்; சொந்தமாக எழுதக்கூடாது. ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு, 3வது பிரிவை முழுவதும் புரிந்து படிக்க வேண்டும். விடைகளை மாற்றி எழுதாமல், பாய்ன்ட்களாக எழுத வேண்டும். சென்டம் அடிக்க பொதுத்தேர்வு வினா தாள்களை குறைந்தது 10 முறை எழுதிப்பார்க்க வேண்டும். தாவரவியலை 1.30 மணி நேரமும், விலங்கியலை 1.30 மணி நேரமும் பிரித்து எழுத வேண்டும். படங்களுக்கும் மதிப்பெண் உள்ளதால் பாகங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும்.

    நேர மேலாண்மை முக்கியம்!

    நாகராஜ் (தாவரவியல்): கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில், 50 சதவீத கவனம் தாவரவியல் பாடத்துக்கு கொடுத்தாலே, முழு மதிப்பெண்களை அள்ளலாம். இத்தேர்வுடன், உயிரியல் பாடத்தையும் எழுதவேண்டும் என்பதால், நேர மேலாண்மை மிகவும் அவசியம். நெடு வினாக்களில், முக்கிய குறிப்புகளை அடிகோடிட்டு காண்பிக்க வேண்டும். அட்டவணையை கொண்ட கேள்விகளை தேர்வு செய்வதன் மூலம், நேரத்தை மிச்சப்படுத்த இயலும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தாவர செயலியல் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம். இப்பாடத்தில் இருந்து, 75க்கு 32 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இடம்பெறும்.

    கேள்வியை புரிந்து எழுதுங்க!

    ராமமூர்த்தி (கம்ப்யூட்டர் சயின்ஸ்): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மிகவும் எளிமையானது. ஒரு மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள கேள்விகள் மற்றும் மாதிரி கேள்வித்தாள்களை கொண்டு தயார்படுத்திக் கொண்டாலே போதுமானது. இரண்டு மதிப்பெண் கேள்விகளை, புத்தகத்தில் இருக்கும்படியே எழுதவேண்டும். இப்பாடத்தில், மாணவர்களை குழப்பும் வகையில் ஒரே வார்த்தைகளில் சில வேறுபாடுகளுடன் கேள்விகள் அமையும். இதனால், மாணவர்கள் கேள்விகளை கவனமுடன் படித்து, உள்வாங்கிய பின்பே பதில் எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் வினாவுக்கு, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் எச்.பி., பென்சில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    மூன்றே மாத உழைப்பு!

    ரவி (இயற்பியல்): திருப்புத் தேர்வு தவிர, 15 முறை முழுத் தேர்வு வினாக்களை எழுதிப்பார்த்தால் மாணவர்கள் எளிதில் சென்டம் பெற முடியும். சூத்திரங்கள், அலகுகள், மாறிலிகளை மனப்பாடம் செய்துகொண்டால் தேர்வு சமயத்தில் பயமின்றி எழுதலாம். சாதாரணமாக தேர்ச்சிபெற விரும்பும் மாணவர்கள் 1, 2, 6, 7 பாடங்களின் பின்புறமுள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு படித்தால் 15 மதிப்பெண் நிச்சயம். 10 மதிப்பெண், 1 , 5, 3 மதிப்பெண் என்ற வரிசையில் விடை எழுதினால், எளிதில் தேர்வை முடித்துவிடலாம். தினமும் பாடங்களை எழுதிப்பார்ப்பது நல்லது. கடைசி மூன்று மாதங்களை நல்ல முறையில் பயன்படுத்தினால், நினைத்த இலக்கை அடையலாம்.

    கணிதம் கண்டு பயமில்லை!

    சில்வெஸ்டர் சந்துரு (கணிதம்): பாட புத்தகம் படித்தால் ஒரு மதிப்பெண் வினாக்களில் 40 மதிப்பெண் சுலபம். 1, 2, 3, 5, 9, 10 பிரிவுகளை முழுமையாக புரிந்து கொண்டால், 6 மதிப்பெண் வினாக்களை எழுதிவிடலாம். முக்கிய வினாக்களை குறித்து தினமும் படிப்பதுடன், எழுதிப்பார்க்க வேண்டும். இதனால், மனதில் நிலையாக பதிந்துவிடும். விடைகளில் சூத்திரங்களை எழுதுவதன் மூலம், விடை தவறானாலும் சூத்திரத்துக்கு மதிப்பெண் வழங்கப்படும். கணிதத்தை படித்து மனப்பாடம் செய்வதை காட்டிலும், அனைத்து படிகளையும் நன்கு புரிந்து பார்த்தாலே போதும்; கணிதம் கண்டு பயம் எழாது. தன்னம்பிக்கை மற்றும் தொடர் முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    தன்னம்பிக்கை தந்த சாதனை மாணவர்

    கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1186 மதிப்பெண் எடுத்த ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மாணவர் ரவிசங்கர் தன்னம்பிக்கையூட்டி பேசுகையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். என்னால் முடியும்; என்னால் அதிக மதிப்பெண் வாங்க முடியும், என்ற உத்வேகம் இருந்துகொண்டே இருப்பது நல்லது. காரியத்தில் ஆர்வத்துடன் இருப்பதே வெற்றிக்கு முதல்படி. ஒரு மதிப்பெண் வினாக்களில் வேகமும், விவேகமும் அவசியம். சிறு தவறுகளையும் எழுதிவைத்து, தேர்வுக்கு முன் திருத்திக் கொள்ள வேண்டும். முழு மதிப்பெண் வாங்கமுடியும் என்ற  நம்பிக்கை வேண்டும். அனைத்துக்கும் மேலாக கடவுள் ஆசி பெற வேண்டும், என்றார்.

    கலைப்பிரிவு பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அளித்த ஆலோசனைகள்:

    பக்கம் நிரப்பினால் போதாது!

    சரஸ்வதி (பொருளாதாரம்): தேர்ச்சி மட்டும் பெறவிரும்பும் மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களை நன்கு தெரிந்திருக்க வேண்டும். 3, 4, 8வது பாடங்களை படித்தால் 20 மதிப்பெண் வினாக்களை எளிதில் எழுதிவிடலாம். 2, 5, 6, 7, 10, 12வது பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் வினாக்கள் அதிகம் கேட்கப்படும். 1 - 7வது பாடங்கள் வரை மூன்று மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். வினாக்களை மாற்றி எழுதாமல் ஒரே வரிசையில் எழுதுவது நல்லது. பக்கங்களை நிரப்பவேண்டும் என்று எழுதாமல், உரிய பதிலை மட்டுமே எழுதினால் போதுமானது.

    கூட்டல், கழித்தலில் கவனம்!

    ஷோபனா (வணிகவியல், கணக்குப்பதிவியல்): கணக்குப்பதிவியல் பாடத்தில் சென்டம் அடிப்பது சுலபம். வினாவின் கருப்பொருள் அறிந்து பதிலளிக்க வேண்டும். எழுதும்போது அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. 2.30 மணி நேரத்துக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட வேண்டும். மீதமுள்ள அரை மணி நேரத்தில், வினா - விடைகளை திருப்பிப்பார்ப்பது அவசியம். ஒரு மதிப்பெண் வினாவில், சிறு கணக்குகள் கேட்கப்படும்; அதை எழுதிப்பார்த்து விடையளிக்க வேண்டும். 20 மதிப்பெண் வினாவில் கூட்டல், கழித்தல் கணக்கு சரியாக இருக்க வேண்டும். இனியுள்ள மூன்று மாதங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம்.

    நேர மேலாண்மை தேவை!

    சில்வெஸ்டர் சந்துரு (வணிக கணிதம்): ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சூத்திரங்களை தெளிவாக புரிந்து படித்துக்கொள்ள வேண்டும். தேர்வு பயன்பாட்டிற்கு, கால்குலேட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான கேள்விகளுக்கு வரைபடம் கட்டாயம் வரைதல் வேண்டும். கிராப் பகுதியை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. நேர மேலாண்மை என்பது இப்பாடத்திற்கு அவசியம். தேர்வு எழுதி, மீதமுள்ள, நேரத்தில் நாம் எழுதிய விடைகள் சரியாக உள்ளதா, கவனக்குறைவால் பிழைகள் ஏதேனும் செய்துள்ளோமா என்று ஒரு முறைக்கு, மூன்று முறை பார்த்துக்கொள்வது அவசியம்.

    இனி மனப்பாடம் இல்லை... புரிந்து படிப்போம்!

    ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி குறித்து, மாணவர்கள் தெரிவித்த கருத்துகள்:

    * வித்யாசாகர்: பாடங்களில் இருந்த சந்தேகங்களை தெளிவுபடுத்த, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்தது. பாடங்களை திட்டமிட்டு படிப்பது எப்படி, எந்த பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பன சார்ந்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டேன்.

    * சூர்யா: சமன்பாடு கள், தீர்வுகள் மிக கடினமாக கருதினேன். எளிதாக, நினைவுபடுத்திக் கொள்ள ஆசிரியர் டிப்ஸ் கொடுத்துள்ளார். வேதியியல் பாடத்தில், கட்டாய கேள்வி எந்த பாடத்திலிருந்து வரும் என்று தெரிந்து கொண்டேன். 10 மதிப்பெண் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்குவது குறித்தும் விளக்கினர். கணித பாடத்திலும், பல சந்தேகங்களை தீர்த்துக் கொண்டோம்.

    * அங்காளபரமேஸ்வரி: தினமலர் சார்பில், வழங்கப்பட்டுள்ள புளூ பிரிண்ட் மிகவும் எளிமையாக உள்ளது. இதை, முறையாக படித்தாலே, நல்ல மதிப்பெண் பெறலாம். கணித பாடத்துக்கு நேரம் ஒதுக்குவது குறித்து தெளிவு பெற்றேன்.

    * பிரதீபா: ஒரு மதிப்பெண் முதல் 10 மதிப்பெண் கேள்விகள் வரை எந்த பகுதிகளிலிருந்து வரும், எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொண்டேன். தேர்வு சமயத்தில், பயம், பதட்டத்தை எவ்வாறு தவிர்க்கலாம் எனவும், டிப்ஸ் வழங்கியுள்ளனர்.

    * அகிலா: புதிய வழிமுறைகளை பின்பற்றி பாடங்கள் நடத்துவது புரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. ஆங்கிலம் பாடத்தை மனப்பாடம் செய்து வந்தேன். வரும் மூன்று மாதங்களில் புரிந்து படிக்க திட்டமிட்டுள்ளேன்.

    தேர்வு ஜுரம் போயே போச்சு!

    ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி குறித்து, மாணவர்களின் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்:

    * சாவித்ரி: என் மகளுக்காக வந்துள்ளேன். தேர்வு பயம் தேவையில்லை என்பதை ஆசிரியர்களின் சிறப்பு கருத்துக்களுடன் தெளிவுபடுத்தினர். ஒவ்வொரு பாடத்திலும், எவ்வாறு திட்டமிட்டு படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதால், ஏற்படும் விளைவுகள், தேர்வு அறையில் செயல்பாடுகள், நேர மேலாண்மை என பல்வேறு விளக்கங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    * சந்திரமோகன்: மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு ஜுரம் போன்று ஆகிவிட்டது. அப்பயம், பதட்டத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் அகற்றியுள்ளனர். மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

    No comments: