"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ஆயா வரை ஆங்கிலம் பரவியுள்ளது" என, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறினார். நாமக்கல் நல்லிபாளையத்தில், நம்பிக்கை இல்லம் செயல்படுகிறது. இந்த நம்பிக்கை இல்லத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் துவக்கி வைத்தார். அவரது நேரடி கண்காணிப்பில் இயங்கி வரும் அந்த இல்லத்துக்கு, அவர் நேற்று வந்தார்.
வேண்டுகோள்
மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த, பாண்டமங்கலத்தில் வசித்து வருபவர், சுதந்திர போராட்ட தியாகி தர்மலிங்கத்தின் மகள் உமாராணி; பார்வையற்ற அவர், என்னை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து வந்தார்.
நாமக்கல் வரும்போது, நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என, தெரிவித்திருந்தேன். அதன்படி, நேற்று, அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தேன். சுதந்திரத்துக்காக, பல தியாகங்களை செய்தவரின் வாரிசான அவர், இன்று வறுமையில் உள்ளார். பல இடங்களில், குழந்தைகளை சந்தித்தபோது, அவர்களிடம், என்னவாக போகிறீர்கள் எனக் கேட்டேன்.
அதற்கு, டாக்டர், கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றனர். குழந்தைகளின் எண்ணத்தில், நேர்மையான சிந்தனைகள் எங்கிருந்து வந்தது. இன்றைய இளைஞர்கள், நேற்றைய குழந்தைகள். நாம்தான் சமூகம் கெட்டுப்போக காரணம். நேர்மையான சமூகத்தை உருவாக்க வேண்டும். அவற்றை நம்முடைய இல்லத்தில் இருந்து துவங்குவோம்.
மதுரையில் கலெக்டராக பணியாற்றியபோது, 70 வயது பெண், பென்ஷன் வேண்டும் எனக் கேட்டார். அவரிடம், பெயர், ஊர் கேட்ட பின் முகவரி என்ன எனக் கேட்டேன். அப்படி என்றால் என்ன என்றார். உங்கள் அட்ரஸ் தெரியுமா எனக் கேட்டேன். அதற்கு அவர், அப்படி புரியும்படி கேட்க வேண்டியதுதானே, என்றார்.
சிறப்பு வாய்ந்த மொழி: ஆங்கிலத்தில் கேட்டால் தான் ஆயாவுக்கே புரிகிறது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ஆயா வரை ஆங்கிலம் பரவியுள்ளது. தமிழின் சிறப்பு, வடமாநில எம்.பி., தருண் விஜய்க்கு புரிந்துள்ளது. ஆனால், தமிழனுக்கு, அதன் பெருமை புரியவில்லை. சிறப்பு வாய்ந்த மொழி அழிந்துவிடக்கூடாது என, யோசிக்கிறோம். நம் மொழியை வலுப்படுத்த ஆசைப்படுகிறோம்.
அதற்கு, தமிழில் கையெழுத்திடும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழில் பெயர் வைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தைகள், மம்மி, டாடி என அழைப்பதை தவிர்த்து, அம்மா, அப்பா என அழைக்க பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார்.
No comments:
Post a Comment