Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 30, 2014

    முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை

     என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக

    இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும்அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

    கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு! அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.
    ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன்இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?“ என்று சொல்லும் போதுஇது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள் ஒருபக்கமிருக்க, வேறுபல திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.
    இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், மிகுந்தபன்முக- திறமைசாலிகளாக இருப்பதை, சில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள், சூப்பர்-சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
    இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல், குறும்புசெய்து திட்டும்குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்துஓடிவிளையாடு பாப்பாஎன்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனைஎன்று சொல்லமுடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.
    முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாகமாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800பேர்என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளிபிசகாமல்வாந்திஎடுத்துஎழுதிக்காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனதான். பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா யோசித்துப் பார்!
    இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும். இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?
    ஆனால், எனதுநண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – “சார், நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை, என்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்” “ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சிஎன்று நான்சொல்ல, அவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்துமுடிச்சிடுறாங்கெ சார்! பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27வயசுக்காரன் சொன்னா, 60வயசுல நா என்ன சொல்றது?” என்று அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
    யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல்நேராகபார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில்புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?
    இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது? எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா?
    எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,
    பி..படித்தால்பொறியாளர்ஆகலாம்.
    பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,
    ..எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,
    எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.
    ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்?
    மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம். என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.
    அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி, எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால், நேர் எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!
    கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால், அந்தப்படிக்காதவர்கள்தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும்கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும்கல்வி முதலாளிகளை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர்விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காதஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறுபேர்முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
    பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-
    தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!” இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?
    ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூடதோழர்எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும்தா.பா.வர்ராராமில்ல?””ஜி.ஆர்.பேசுறாராமில்ல?” என்று பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!
    சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ அந்தக்கவிதை -
    எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்,
    எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
    கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர
    கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா” – என்பது,. புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
    முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!
    இதைத்தான் நமது மகாகவி பாரதி
    அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
    கடந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல, வழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும், கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.
    பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்துஉருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாகமாநில அளவில் முதல்மதிப்பெண்பெற்ற மாணவர்களுக்குஅவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?
    நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும்அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.
    இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சிலபல நாள்களாக, பள்ளியிறுதி(SSLC),, மற்றும் மேல்நிலை(+2) வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக்கல்விவள்ளல்களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!
    இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவெ படித்து, விரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்றுசெட்டில்ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையிலடித்தாற்பேலச் சொன்னார்?
    தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்
    சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்
    தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்நாட்டின் நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும், “தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்றுஎன்று சொல்லியிருக்க வேண்டும்.
    மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
    தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டுசமூக மனிதனாகநாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும் விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். ஆனால், முதல் மதிப்பெண் வெற்றி தானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். தனது பள்ளிப்படிப்பில்மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப்பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!
    படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! அப்புறம்பாடப்புத்தகம் தவிரவும்- என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும் மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு.
    சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...
    நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...
    சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
    எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க...
    எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
    பட்டுக்கோட்டையார் பாடல்
    அவ்வளவுதான் மகளே!
    அன்புடன்
    உன் அப்பா.


    நன்றி - வாசிப்பு

    4 comments:

    Unknown said...

    unforgettable and very useful letter to
    the young generation....

    Breaking now said...

    Excellent sir

    Anonymous said...

    nandri iyya.

    nanum muthal mathipen endra ennathodu than college padippu mudikkum varaiyilum padithen. anaal tharpoluthu nan ipadi illai vazhkkai ennaku kartu koduthuvitathu. thaangal sonnathupol enaal yosikka mudigirathu. kandipaka enai sarnthavargalaiyum ennudai sonnangalaiyum ithupol ennangal thondra nan karanamai irupen.
    ipai nan martum alla thangalaipol inum manithargal irukirargal endu ninakkum poluthu manam magizhchi adigirathu.

    nandri
    nandri
    nandri

    C.Sugumar said...

    மனிதவளம் பெருக்கும்நடவடிக்கையில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும். ஓய்வு நேரத்தில் இலக்கியங்களைப்படிக்க வேண்டும். மேல்நாட்டு நாகாீகத்தின் கசடுகளை முன்னிருத்தி, மேல்நாட்டின் சிறப்பிற்கு காரணம் மது,குறைந்த உடையணிந்த பெண்கள் வயது வந்த பொிய பெண்களை பொிய ஆண்கள் இறுக தழுவி முத்தம் கொடுத்தல் போன்ற செயல்கள் தான் காரணம் என்ற பொய் தோற்றத்தை ஊடகங்கள் சினிமாக்கள் ஏற்படுத்துகின்றன. பாவம் இளைஞா்கள் ஏமாந்து போகின்றாா்கள். வாழ்க்கையின் சுது வாது தொியும் போதுதான் புாிகின்றது.இவையெல்லாம் ஏமாற்று வேலை என்று. அண்மைக்காலங்களில் வரும் திரைப்படங்களில் ஆண்கள் முழுக்கால்சட்டை முழுகை சட்டை ஏன்று உடையணிந்து நடிக்கும் போது கதாநாயகிகளுக்கு மட்டும் ...... எப்படியெல்லாம் வித்தை செய்து கால் பங்கு உடை என்று அசிங்கமாக உடையணிந்து செக்ஸ் appeal காமக்கவா்ச்சியை முன்நிறுத்தி நடனங்கள் நடிப்பு ஆகியவை மக்களின் பாா்வைக்கு வயது பேதமில்லாமல் ரசிக்க படைக்கப்படுகின்றன. இந்நிலை தொடா்ந்தால் பிறந்த பெண்குழந்தை கூட பாலியல் வலறுறவுக்கு ஆளாக்கப்படும். சினிமா பொழுது போக்கு அம்சங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.இல்லையேல் நாம் அதைவிட்டு விலக வேண்டும்.