நாமக்கல்லில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் நேரில் சென்று, அந்த பள்ளி ஆசிரியர்களை சந்தித்து காரணம் கேட்டு வருகிறார்.
நாமக்கல் அருகேயுள்ள முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் இப்பள்ளியில் 25 பேர் தோல்வி அடைந்தனர். வணிகவியல் பாடத்தில் அதிகம் பேர் தோல்வியாகியுள்ளனர். 79 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் திடீர்ஆய்வுக்கு சென்றார். அப்போது, பள்ளியில் இருந்த முதுகலை வணிகவியல் ஆசிரியர் சரவணமுத்துவை அழைத்து முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டார். அப்போது ஒரு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்த கணித ஆசிரியர் முருகேசன் (51), வகுப்பறையில் இருந்து வெளியேறி முதன்மை கல்வி அலுவலரை நோக்கி வந்தார்.
இதை கண்ட முதன்மை கல்வி அலுவலர், எதற்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர், பள்ளியில் ஒரே சப்தமாக இருப்பதால், என்ன நடக்கிறது என்பதை பார்க்கவே வெளியே வந்தேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த முதன்மை கல்வி அலுவலர், வகுப்பறைக்கு போகும்படி ஆசிரியர் முருகேசனிடம் கூறினார். ஆனால் அவர் வகுப்பறைக்கு செல்ல மறுத்து, முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அங்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியை தனலெட்சுமி, அந்த ஆசிரியரை கண்டித்தும் அவர் வகுப்பறைக்கு செல்ல மறுத்தார். அதை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களயும் அழைத்து அறிவுரை கூறிய முதன்மை கல்வி அலுவலர், இந்த கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற அனைவரும் முயற்சி எடுக்கவேண்டும் என கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆசிரியர் முருகேசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் குமார் உத்தரவிட்டார். உயர் அதிகாரியின் ஆய்வின் போது, வகுப்பறையில் இல்லாமல் வெளியே வந்தது, உயர்அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் நடந்து கொண்டது போன்ற செயலுக்காக ஆசிரியர் முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். பள்ளி திறந்த 2வது நாளிலேயே, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment