தமிழகத்தில் இனி, 'அம்மா உப்பு' விற்பனை கனஜோராக நடக்கும்.ரேஷன் கடைகள் மட்டும் அல்லாமல், தனியார் அங்காடிகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், இது விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே உள்ள தனியார் கம்பெனி தயாரிப்பு களுடன், இந்த பிராண்ட் போட்டியிட வருகிறது. அம்மா உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, சப்பாத்தி போன்ற பொருட்களுடன், 'அம்மா குடிநீர்' என்ற விற்பனையுடன் இது சேருகிறது.
தமிழ்நாடு உப்பு கழகத்தில் தயாரிக்கப்படும், அயோடின் கலந்த உப்பு, ஏற்கனவே ரேஷன் கடைகளில் விற்பனையாகிறது. தற்போது வந்துள்ள இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு, முன்கழுத்து கழலை மற்றும் ரத்தசோகையை கட்டுப்படுத்த உதவும் காரணியாக இருக்கும். அதுமட்டுமின்றி குறைந்த அளவு சோடியம் உப்பு இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உதவும். அடுத்ததாக சுத்திகரிக்கப்பட்ட உப்பு, வழக்கமாக சமையலுக்கு பயன்படும், தரமுள்ள தயாரிப்பாக அமையும்.
தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர், இந்த ரக உப்புகள், சந்தையில், மற்ற தனியார் உப்பு ரகங்களை விற்பனையில் வீழ்த்தி, சாதனை படைக்கும் என, எடுத்த எடுப்பிலே கூறியுள்ளார்.அரசு விற்பனை செய்யும் உப்பு ரகங்களுக்கும், தனியார் தயாரிப்பு உப்புக்கும், விலை வித்தியாசம் சராசரியாக கிலோவுக்கு, 6 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டில், பெரிய மாறுதல் வராது.தவிர, மருத்துவ ஆய்வுகள் தினமும், புதிய புதிய தகவல்களை தருகின்றன. சோடியம் குறைவான உப்பு மட்டும், இதய நோய்க்காரர்கள் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்க முடியாது.கண்டபடி நொறுக்கு தீனி சாப்பிட்டு, 40 வயதுக்காரர்களுக்கு நீரிழிவு வந்ததும், அவர்களுக்கு மருத்துவர்கள், மாம்பழம், வாழைப்பழம் சாப்பிட பொதுவான தடை விதித்து விடுகின்றனர். ஆப்பிள், கொய்யா, பப்பாளி என்ற புதிய தாரக மந்திரத்தை சொல்கின்றனர். இதனால், தமிழன் முக்கனிகளில் இரண்டை, 40 வயது ஆனதும் இழக்க நேரிடுகிறது.
நம் நாட்டில், புகையிலைப் பொருட்களான, சிகரெட், குட்கா போன்றவைகளால் ஏற்படும் மருத்துவ செலவு, ஆண்டுக்கு, லட்சம் கோடி ரூபாய். மதுப்பழக்கத்தால் ஏற்படும் மருத்துவ செலவும், இதே மாதிரி தான்.அரசு, ஏழை மக்களுக்கு உதவும் இம்மாதிரி
திட்டங்களை அமல்படுத்தும் போது, இத்திட்டங்களுக்கு ஆகும் மானிய அளவை அறிவிப்பது வழக்கம்.அத்துடன், இனி இதில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், இயல்பாக தங்கள் துறைகளில் இருந்து இப்பணிக்கு முக்கியத்துவம் தர முன்வந்து விடுவர்; அது கட்டாயமாகிவிடும்.
அப்படி வரும், கீழ்நிலை ஊழியர் முதல் உயர் பதவி அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரங்கள், இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் செலவை, அரசு கணக்கிட்டால் நல்லது. அதை விட இவர்கள் வழக்கமான பணியில் இருந்து விலகி நிற்பதால், அப்பணிகளில் ஏற்படும் மொத்த நிர்வாகச் செலவு இழப்பு, திறன் இழப்பு ஆகியவை குறித்தும், அரசு தகவல் வெளியிட்டால், மக்கள் நலச் சேவைக்காக, அரசு பாடுபடுவது புரியும்.
இனி, தேர்தல் வாக்குறுதிகளை தரும் ஒவ்வொரு பெரிய கட்சியும், எந்தெந்தத் துறையில், அரசு பொருட்களை தயாரித்து, நேரடி விற்பனை செய்யும் என்பதையும் முன்கூட்டியே அறிவித்தால், ஓட்டளிக்கும் போது மக்கள் இதுகுறித்து சிந்திக்க வாய்ப்பாகும்.
No comments:
Post a Comment