வருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால்,மறைமுக வரி வசூல் தானாகவே அதிகரிக்கும் என, மத்திய அரசு, 'கணக்கு' போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிலைக் குழு:
யஷ்வந்த் சின்கா தலைமை யில், நிதி துறைக்கான, பார்லிமென்ட் நிலைக் குழு, வருமான வரி உச்ச வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சமாக உயர்த்தலாம் என, பரிந்துரைத்தது. அதாவது, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி விலக்கும், அதற்கு மேல், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 10 சதவீத வரி விதிக்கலாம் என, தெரிவித்தது.
மேலும், 10-20 லட்சம் வரையிலானவருவாய்க்கு, 20 சதவீதமும், 20 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய்க்கு, 30 சதவீதமும் வரி விதிக்க பரிந்துரைத்தது.ஆனால், முந்தைய மத்திய அரசு, இந்தபரிந்துரையை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு, வருமான வரிக்கானஉச்சவரம்பை உயர்த்துவது, வரிக்கு கூடுதல் வரிகளை ரத்து செய்வது உட்பட, வரித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த வகையில், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா என, மத்திய அரசு யோசித்து வருகிறது.
பணப்புழக்கம்:
இத்திட்டத்தால், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதனால் அவர்களின் தேவையும் அதிகரிக்கும். அதை பூர்த்தி செய்து கொள்வதற்கு, அவர்கள் தாராளமாக செலவழிப்பர். இதனால், சரக்கு மற்றும் சேவைகள் துறை பயனடையும். குறிப்பாக, தயாரிப்பு துறை மற்றும் சேவைகள் துறைகளின் வளர்ச்சிக்கும், உற்பத்தி அதிகரிப்பிற்கும் துணை புரியும்.உற்பத்தி உயரும்போது, அது சார்ந்த வரி வருவாயும் அதிகரிக்கும். இதனால், ஒட்டுமொத்த மறைமுக வரி வசூல் உயரும் என, மத்திய அரசு, கணக்கு போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரி சீர்திருத்தங்களால், மத்திய அரசுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடத்தக்க அளவிற்கு, மறைமுக வரிகள் வாயிலாக வசூலித்து விடலாம் என, மத்திய அரசு கருதுகிறது. அதாவது,ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த நினைக்கிறது. ஆனால், இது எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது குறித்து இரு வேறு கருத்துகள் உள்ளன.
வல்லுனர்கள்:
மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால், அது பணவீக்க உயர்வை சமாளிக்க உதவும் என்று சிலர் கூறினாலும், அது, பணவீக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பது, பொருளாதார வல்லுனர்களின் வாதமாக உள்ளது.
No comments:
Post a Comment