சர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து மூன்று பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அமைத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதா அல்லது அதில் படிக்கும் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளுக்கு மாற்றம் செய்வதா என்பது குறித்து இந்தக் குழு இறுதி முடிவை எடுக்க உள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க பி.என். டாண்டன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
இந்தக் குழு பல்கலைக்கழக நிர்வாகம், கற்பித்தல் முறை, மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அதில் 38 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன, 44 பல்கலைக்கழகங்கள் நிலையை சற்று மேம்படுத்திக் கொள்ள வேண்டும், மீதமுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என பரிந்துரைத்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 16 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அடங்கும்.
இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் யுஜிசி-யும் நேரடியாக ஆய்வு செய்ததோடு, மற்றொரு குழுவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான இந்த குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றின் மீது என்ன விதமான நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசுக்கு இரண்டு மாதங்களில் ஆலோசனை வழங்க வேண்டும் என யுஜிசி-க்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக கடந்த மார்ச் 25, 26, 27 தேதிகளில் யுஜிசி கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இப்போதைய நிலை குறித்த ஆய்வு செய்ய மீண்டும் ஒரு கமிட்டியை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் இப்போது யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
டாண்டன் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த 5 ஆண்டுகளில் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிலை மேம்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றின் இப்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, இந்த 3 பேர் குழுவை யுஜிசி இப்போது அமைத்துள்ளது.
இதுவரை, அந்த பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று குழு ஆய்வு மேற்கொண்டு வந்தது. இப்போது, இந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகிகள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் இந்த 3 பேர் குழு விசாரணை மேற்கொள்ளும்.
ஜூலை 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதில் எந்தெந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு "பி' கிரேட் அல்லது "சி' கிரேட் அளிப்பது அல்லது அங்கீகாரத்தை ரத்து செய்வதா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
அவ்வாறு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களை உடனடியாக வேறு எந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் சேர்ப்பது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment