கோடை விடுமுறையை அனுபவிக்காத, என்.சி.எல்.பி., குழந்தைகளுக்கு, இன்று(ஜுன் 2) வகுப்புகள் துவங்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில், தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டம், (என்.சி.எல்.பி.,) தமிழகத்தில், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட, 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, 382 குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், 21 என்.சி.எல்.பி., பள்ளிகளில், 500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு பாடம் எடுக்க, தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகிறது.
நலத்திட்டங்கள்
மற்ற பள்ளி மாணவ, மாணவியர் போல், இங்கு படிப்பவர்களுக்கும், சத்துணவு உட்பட, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. என்.சி.எல்.பி., பள்ளியில் படிக்கும், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஆனால், அந்த மாணவ மாணவியருக்கு, எவ்வித விடுமுறையும் விடப்படுவதில்லை. இவர்கள், கோடை விடுமுறைக்கு, தங்களது பெற்றோருடன், வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. பெற்றோருடன் கோடை விடுமுறைக்கு அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும், குழந்தை தொழிலாளர்களாக மாறிவிடுவர் என, என்.சி.எல்.பி., அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல், மே மாத கோடை விடுமுறையை, என்.சி.எல்.பி., குழந்தைகள் பள்ளியிலேயே கழித்தனர். இன்று, மற்ற பள்ளிகள் திறக்கப்படுவதால், என்.சி.எல்.பி., குழந்தைகளுக்கும், முறைப்படி வகுப்புகள் துவங்கப்படுகிறது. இவர்களுக்கு தேவையான, நோட்டு, புத்தகம், சீருடை உள்ளிட்ட, விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment