பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத் தேர்விற்கு முன், செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.
இதில், அகத்தேர்விற்கு (இன்டர்னல்) 5 மதிப்பெண்களும், புறத்தேர்விற்கு (எக்ஸ்டர்னல்) 20 மதிப்பெண்களும் வழங்கப்படும். செய்முறை தேர்வில் கிடைக்கும் 25 மதிப்பெண்ணில், அதிகபட்ச மதிப்பெண்ணை பெரும்பாலான மாணவர்கள் பெற்றுவிடுவர்.
கடந்தாண்டு வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் தேர்வுகளுக்கு, தலா 4 சோதனைகள் வீதம் மொத்தம் 16 சோதனைகள் தான் பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. இச்சோதனைகள் தான் தற்போது 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்தகவல், மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட இலவச புத்தகங்களில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இப்புதிய பாடத்திட்டப்படி, செய்முறைத் தேர்வுகளுக்கான சோதனைகள் பகுதி அ மற்றும் பகுதி ஆ என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், தாவரவியலில் தலா 3 சோதனைகளும், விலங்கியலில் 4 என, இரு பகுதிகளிலும் (13+13) 26 சோதனைகள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து உயர்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறை தேர்வில் அதிகரித்துள்ள சோதனைகள் குறித்து அதிகாரிகள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. புத்தகங்களை பார்த்து தான் நாங்களே தெரிந்துகொண்டோம். அதிகாரிகள் உத்தரவுப்படி செய்முறை தேர்வுகளை நடத்துவோம்" என்றனர்.
No comments:
Post a Comment