மேலுார் அருகே, சிதிலமடைந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தை, கிராமத்தினரே சீரமைத்து உள்ளனர்.மதுரை மாவட்டம், மேலுார் அருகே, கூலிபட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். வகுப்பறைகளின் தரை, மேடு, பள்ளமாக சிதிலமடைந்ததால், மாணவ, மாணவியர் அமர்ந்து படிக்க முடியாமல் அவதிக்குள்ளாயினர்.
கிராம மக்கள், கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, தலைமை ஆசிரியை ரிஷ்வானா பேகம், உதவி ஆசிரியர் ராஜா மாணிக்கம், கல்விக்குழு தலைவர் பாண்டி மற்றும் கிராம நிர்வாகிகள், பள்ளியை சீரமைக்க திட்டமிட்டனர்.அரபு நாடுகளில் பணிபுரியும் கிராம இளைஞர்களை தொடர்பு கொண்டனர். பள்ளியின் நிலை குறித்து, 'வாட்ஸ்-ஆப்' மூலம் தகவல் அனுப்பினர். ஒன்றரை ஆண்டுகளில், பல லட்சம் ரூபாய் வசூலானது. இந்த பணத்தைக்கொண்டு, சிதிலமடைந்த கட்டடத்தை சீரமைத்தனர். தரையில், டைல்ஸ் கற்கள் பதித்து, மாணவர்கள் படிக்க, வட்ட மேஜைகள், மின்விசிறிகள் வாங்கி கொடுத்தனர். இன்று, புதுப்பொலிவுடன், ஐந்து வகுப்புகளும், புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் செயல்படுகின்றன.
No comments:
Post a Comment