ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, மாதந்தோறும், 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 14 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நியமித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை-கல்லாவி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 2,469 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 1 வகுப்பில், 541 மாணவர்கள், பிளஸ் 2 வகுப்பில், 674 மாணவர்கள் என மொத்தம், 1,222 படித்து வருகின்றனர். பள்ளியில், மேல்நிலை வகுப்புகளுக்கு கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்குப்பதிவியல், வேளாண்மை, தொழிற்கல்வி, வரலாறு என, ஆறு பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு விதிப்படி, 40 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். ஆனால், இப்பள்ளியில் தமிழுக்கு, மூன்று ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். ஆங்கில பாடத்திற்கு, மூன்று ஆசிரியர்கள் இருந்த போதும், ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. கணித பாடத்திற்கு, நான்கு ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில், இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இயற்பியல் பாடத்திற்கு, இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். வேதியியல் பாடத்திற்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். உயிரியல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர் கூட இல்லை. வேளாண்மை பாடத்திற்கு, மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. 78 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 64 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இருந்த போதும், ஆண்டுதோறும் நடக்கும் பொதுத்தேர்வில், 70 முதல் 80 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை, மாவட்ட கல்வித்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதால், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், 14 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும், 70 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதற்கு போதிய நிதி இல்லாததால், பெற்றோர் ஆசிரியர் கழகமும் கையை பிசைந்து வருகிறது. இதற்காக தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களிடம் மாதந்தோறும் நன்கொடை பெற்று வரும் நிலையில், போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தால் ஒரு வகுப்பறையில், 81 மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இது குறித்து, சி.இ.ஓ., தமிழரசு கூறியதாவது: ஆசிரியர்கள் கவுன்சலிங் நடந்து கொண்டிருக்கிறது. இது முடிந்தவுடன் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாதது குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் வகுப்பறைகள் கட்டப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment