அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட விழிப்புணர்வை செய்முறை பயிற்சி வழியே ஏற்படுத்த, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' திட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தின் கீழ் மாணவியர், சிறுபான்மை, பட்டியலின மாணவ, மாணவியர் மற்றும் நகர்ப்புற நலிவடைந்த குழந்தைகளின் அறிவியல் அறிவை வளப்படுத்த, இலவசமாக அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, இந்த சுற்றுலாவில் அழைத்துச் செல்லலாம்.
ஆராய்ச்சி மையங்கள், அறிவியல் மையங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், அரசு தோட்டப் பண்ணைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரு நாள் சுற்றுலாவுக்கு, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும், 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' நிதி வழங்கும்.
அரசு பேருந்துகளை மட்டுமே வாடகைக்கு அமர்த்திச் செல்ல வேண்டும். தனியார் பேருந்துகளில் செல்லக் கூடாது. மாணவர்களுடன் உடல்நலன் மிக்க, சுற்றுலா தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடிய ஆசிரியர்கள், ஐந்து மாணவருக்கு ஒருவர் என, பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment