அரசு பள்ளிகளில் மடிக்கணினி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோவதால் பள்ளிகளில் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யப்ப நாயக்கன்பட்டியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் 65 விலையில்லா மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த அறையை தலைமை ஆசிரியர் உமா திங்கள்கிழமை திறந்து பார்த்தபோது அறையின் ஜன்னல் கதவை உடைத்து அதிலிருந்த 10 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் காடுபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கச் செயலர் நவநீதகிருஷ்ணன் கூறியது:மதுரை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் உள்ள 54 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரவு நேர காவலர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, பிற பள்ளிகளில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தேனி மாவட்டம் உத்தபுரம், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி ஆகிய பள்ளிகளில் ஏற்கெனவே கணினிகள் திருடப்பட்டுள்ளன. தற்போது அய்யப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியிலும் மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன.
எனவே அனைத்து பள்ளிகளிலும் இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment