கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் 'புத்தகம் இல்லாமல் கல்வி' என்ற பெயரில் தேசிய எழுத்தறிவு இயக்கம் மற்றும் கர்நாடக கல்வி இயக்குனரகம் இணைந்து செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி மைசூரு மாவட்டம், உன்சூர் தாலுகா, மூதூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.
அதை நாற்காலி மீது வைத்து ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்கிறார்கள். மூதூர் கிராமத்தில் தொடங்கியுள்ள இத்திட்டத்தை விரைவில் சில கிராமங்களில் செயல்படுத்த கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது 'கணினி பாடம்' என்ற பெயரில் புதிய பாட திட்டத்தை பெலகாவி மாவட்டத்தில் கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வடகாவி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் இத்திட்டத்திற்காக டிஜி ஸ்கூல் கம்ப்யூட்டர் சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் இரண்டாமாண்டு பி.யு.சி. வரையிலான பாடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி அறையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் டி.வி.டி. மூலம் பாடம் ஒளிபரப்பு செய்யப்படும். ஓவியங்களுடன் இருக்கும் பாடத்தை ஆசிரியர் விளக்கினால், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்துவதின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி கற்பிப்பதுடன், ஆசிரியர்களின் சுமையும் குறைகிறது. மேலும் பாடத்தில் எத்தனை முறை சந்தேகம் வந்தாலும், அதை அடிக்கடி டி.வி.டி. மூலம் போட்டு தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். எதிர்க்காலத்தில் டி.வி.டியை தனிதனியாக மாணவர்களுக்கு வழங்கும் யோசனையும் கல்வி இயக்குனரகத்திற்கு இருப்பதாக தெரியவருகிறது.
முதல் கட்டமாக பெலகாவியில் தொடங்கியுள்ள �கணினி பாட திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் ஏற்பாடு நடந்து வருகிறது. உலகில் 18 நாடுகளில் இக்கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய கல்வி உலகில் கணினி உதவியுடன் கல்வி வழங்குவது அவசியமான ஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகவுள்ளது.
No comments:
Post a Comment