Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 29, 2013

    ஏன் இந்த போலித்தனம்? - தலையங்கம்

    கல்லூரித் தேர்வுகளில் தமிழ் மொழி நீக்கம் - திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம்' என்று செய்திகள் வெளிவந்தவுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உத்தரவை விலக்கிக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும்
    மன்றம் எடுத்த முடிவு மாணவர்களின் நலன் கருதியதே என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கை, இவர்கள் குறிப்பிடுவதைப்போல, தமிழுக்கு எதிரானதாக இல்லை என்பதுதான் நமது கருத்து.

    தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், தமிழக பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து, துணைவேந்தர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்தி எடுத்த முடிவில், மாணவரின் மொழித்திறனை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தது. இந்த விவாதத்தின் இறுதியில் மொழி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு இதுதான்:

    ""....அக மதிப்பீட்டில் (இன்டர்னல் அசெஸ்மென்ட்) நடைமுறை மொழி ஆளுமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அகமதிப்பீடு 40% மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இதில் 15% மதிப்பெண் மாணவர்களின் மொழி பயன்படுத்தும் திறனுக்காக (ஆங்கிலம் மற்ற மொழிகள்) அளிக்கப்பட வேண்டும்.

    இந்த 15 மதிப்பெண்கள் பின்வருமாறு பிரித்து வழங்கப்பட வேண்டும்: ஒரு மாணவர் அம்மொழியில் பேசும் திறனுக்கு 5 மதிப்பெண், பிறர் பேசுவதைக் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு 5 மதிப்பெண், படித்துப் புரிந்துகொள்வதற்கு 5 மதிப்பெண். ஆகமொத்தம் 15 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்.

    ஆங்கிலமொழி வழியில் பயிலும் மாணவர்கள் தங்கள் அக மதிப்பீட்டு பயிற்சி ஏடுகளை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்''

    இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. ஆங்கில மொழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்துவது தவறா என்ன? ஏன் நம் அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? இந்த நடைமுறைக்கு சில கல்லூரிப் பேராசிரியர், விரிவுரையாளர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அவர்கள்தான் அரசியல்வாதிகள் மூலமாகக் குரல் கொடுக்கின்றனர். காரணம், அவர்களுக்கேகூட ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், சரியாக எழுதவும் தெரியாது என்பதுதான்!

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களே அதிகம். இவர்கள் ஆங்கில வழியில் பயில்வதாகச் சொல்லிக் கொண்டாலும், இவர்களது கையில் ஆங்கிலவழி பாடப்புத்தகங்கள் இருந்தாலும்கூட, இவர்களுக்கு வகுப்பறையில் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் பெரும்பாலும் தமிழில்தான் பாடம் நடத்துகிறார்கள். அல்லது பாதி தமிழ், பாதி ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்.

    இதற்குக் கல்லூரி ஆசிரியர்கள் கூறும் காரணம் - பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகிறார்கள்; அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்தினால் புரியாது என்பதுதான். அப்படியே இருந்தாலும், பெருவாரியான பேராசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்தும் திறன் இல்லை என்பதுதான் இன்னொரு கசப்பான உண்மை.

    வகுப்பறையில் நிலைமை இதுவென்றால், ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் தேர்வை எழுதும்போது, தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கலந்து எழுதும் நடைமுறை இருந்து வருகிறது. மாணவர்கள் எந்த மொழியில் கலந்து எழுதினாலும் விடை சரியாக இருந்தால் மதிப்பெண் கொடுத்துவிடுவது என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால்தான் பெருவாரியான மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் தேர்ச்சி பெறுபவர்களில் பலருக்கும் ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடராவது பிழையின்றி எழுதத் தெரியாது. யாரேனும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், பிழையின்றி எளிய ஆங்கிலத்தில் பதில் அளிக்கவும் தெரியாது என்பதுதான் நிஜ நிலைமை.

    சமீபத்தில், தினமணியில் உதவி ஆசிரியர்கள் பணிக்காக விண்ணப்பித்தவர்களிடம் அவர்களைப் பற்றிச் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதப் பணிக்கப்பட்டபோது, முனைவர் பட்டம் பெற்றவர்களும், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் எம்.பில் செய்தவர்களும் தங்கள் படிப்பு மற்றும் கல்லூரி பற்றி எழுதுகையில், ஐ ஜ்ஹள் ள்ற்ன்க்ண்ங்க் ஹற்....என்றே எழுதியிருந்தனர். இதற்குக் காரணம் அவர்களது பேராசிரியர்கள் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதில்லை, அவர்களது அக மதிப்பீட்டு பயிற்சி ஏடுகளைத் தமிழிலேயே எழுத வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இந்த அவலநிலை கொஞ்சமாகிலும் மாற வேண்டும் என்றால் அவர்கள் அக மதிப்பீட்டு பயிற்சி ஏடுகளையாகிலும் ஆங்கிலத்தில் எழுதிப் பழகினால்தானே முடியும்? (அவர்களுக்குத் தமிழாவது சரியாக எழுதத் தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை.)

    தமிழ் தாய்மொழி. ஆனால், தாய்மொழியில் படிக்க ஆர்வமில்லை. ஆங்கிலத்தில் பட்டம் பெற விருப்பம். ஆனால் அதில் பயிற்சி பெறுவதற்காகக் குறைந்தபட்ச உழைப்பும் ஆர்வமும் மாணவர்களிடம் இல்லை. அவர்களைப் பயிற்றுவிக்கும் திறமையும் புலமையும் ஆசிரியர்களிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இந்த போலித்தனத்தால் தமிழக இளைஞர்களால் தமிழிலும் தவறில்லாமல் எழுத முடியவில்லை, ஆங்கிலத்திலும் புலமையில்லை.

    கல்லூரிகளிலேயே இந்த நிலைமை என்றால், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளைத் தொடங்கினால், இந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பாடம் நடத்துவார்களா? ஆங்கிலத்தில் பாடம் நடத்தும் திறமையுள்ள ஆசிரியர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் அவர்கள் ஆசிரியர்களாக முன்வருவார்களா? வந்தாலும், கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி தமிழில் பாடம் நடத்துவார்களா?

    பெற்றோர்கள் பாவம்! ஆங்கில வழியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பேராசிரியர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கல்லூரி, அல்லது பள்ளி எதுவாக இருந்தபோதிலும், ஒரே ஒரு நாள், வகுப்பறையில் பேராசிரியர் அல்லது ஆசிரியர் வகுப்பு எடுப்பதை, மாணவர்களோடு அவர்தம் பெற்றோரும் தள்ளி அமர்ந்து கவனிக்கலாம் என்று அரசு சொன்னால் போதும்.. (ஆசிரியர் கூச்சப்படுவார் என்றால் காணொளி மூலம் காணச் செய்யலாம்)....பல மாயைகள் உடைந்துபோகும்.

    ஜப்பான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி என்று பல நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்த நாடுகளைவிட அந்த நாடுகள் தொழில்நுட்பத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. பிரச்னை பயிற்றுமொழி அல்ல. பயிற்றுவிப்பவர்களின் திறன். நல்ல ஆசிரியர்களை உருவாக்காமல் நல்ல தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

    தரமான கல்விக்கு அடிப்படை தரமான ஆசிரியர்கள். தரமான ஆசிரியர்களை உருவாக்கத் தேவை தரமான கல்வி, தரமான கல்விக்கு அடிப்படை, திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஆசிரியர்கள் தேர்வு!

    No comments: