2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.
காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்காக மீதமுள்ள பணிநாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் மற்றொரு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களை தமிழில் படித்தவர்களுக்காக நடைபெற்ற இந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
தமிழ் வழியில் முன்னுரிமை கோருபவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், ஆசிரியர் கல்வி பட்டம் ஆகியவற்றை முற்றிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்,
ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் முற்றிலும் தமிழ் வழியில் படிக்காமலேயே தமிழ் வழியில் முன்னுரிமை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆகவேதான் சான்றிதழ் சரிபார்ப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்தும், இளநிலை, முதுநிலைப் பட்டத்துக்கு கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக்கழக பதிவாளரிடமிருந்தும், ஆசிரியர் கல்விப் பட்டம் (பி.எட்.) பெற்றவர்கள் பல்கலைக்கழகப் பதிவாளரிடமிருந்தும் சான்றிதழ்களைப் பெற்றுவர வேண்டும் என அறிவித்திருந்தது. இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியாததாலும் பெரும்பாலானோர் இதில் பங்கேற்காமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மே 27-ல் ஒரு வாய்ப்பு: தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்கெனவே பங்கேற்றவர்கள், இப்போது உரிய சான்றிதழ்களைப் பெற்றிருந்தால், அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை (மே 27) நேரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment