
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா பவானி சாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவது பற்றி ஆற்றிய உரை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டும்; ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை (Civil Service Training Institute) சிறந்த பயிற்சி நிலையமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தைக் கருத்தில் கொண்டும்; 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள், நூலகம், உள் விளையாட்டு அரங்குகள், பதிவறைகள், ஆசிரியர்களுக்கான தனியறைகள், நிர்வாக அலுவலகத்திற்கான கட்டடம், காணொலி கண்காட்சி அரங்கம், தங்கும் விடுதிகள், பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள், நவீன உணவுக் கூடம், மருத்துவ மையம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி நிலையமாக பவானிசாகர் அரசு பயிற்சி நிலையம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த பயிற்சி நிலையத்தில், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் போன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பல்வேறு வகையான நிர்வாக செயல்முறைகளில் அடிப்படைப் பயிற்சியும்; துணை வட்டாட்சியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment