சட்டக் கல்லூரிகளை தனியார் துவங்குவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு, ’நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவர், கே.பாலு, தாக்கல் செய்த மனு: சட்டக் கல்வி வழங்குவதற்கான விதிமுறைகளை வகுக்க, வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி, பார் கவுன்சிலுக்கு தான் அதிகாரம் உள்ளது. பார் கவுன்சில் ஒப்புதல் பெற்ற பின் தான், சட்டக் கல்வியை, கல்வி நிறுவனங்கள் வழங்க முடியும்.
தமிழகத்தில், 65 ஆயிரம் வழக்கறிஞர்கள், ’பிராக்டீஸ்’ செய்கின்றனர். ஆண்டுதோறும், 3,500 பேர், வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர்.
தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதிய வழக்கறிஞர்கள் இல்லை. அதிக தரத்துடன், கூடுதலாக சட்டக் கல்லூரிகள் வர வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழகத்தில், 700 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சட்டக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, 10 என்ற அளவில் தான் உள்ளன. இந்நிலையில், தனியார் சட்டக் கல்லூரிகள் துவங்க, தடை விதிக்கும் விதத்தில், தமிழக அரசு, புதிய சட்டம் கொண்டு வந்து உள்ளது. கடந்த செப்., முதல் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டம், அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகஉள்ளது. மத்திய சட்டத்தில், சட்டக்கல்விக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு தடை விதிக்க, அரசுக்கு அதிகாரமில்லை. ஆந்திரா, கர்நாடகா மற்றும் இதர மாநிலங்களில், அதிக எண்ணிக்கையில், சட்டக் கல்லூரிகள் உள்ளன.
சட்டம் படிப்பதற்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர். எனவே, ’சட்டக் கல்லூரிகளை தனியார் துவங்குவதற்கு, தடை செய்யும் சட்டம் செல்லாது’ என, உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை, நீதிபதிகள் சத்தியநாராயணன், மகாதேவன் அடங்கிய, ’டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, அதற்கு பதிலளிக்க தமிழக அரசு பார் கவுன்சிலுக்கு ’நோட்டீஸ்’ அனுப்ப, ’டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டது. விசாரணையை, ஜன., 19ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
No comments:
Post a Comment