தகுதியுள்ள தன்னாட்சி கல்லூரிகளுக்கு, தாங்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்குவது குறித்த முடிவு வரவேற்பையும், எச்சரிக்கையையும் பெற்றுள்ளது.
நேர்மறை கருத்துக்கள்
இந்த புதிய திட்டம் கவனமாகவும், சிறப்பாகவும் அமல்படுத்தப்பட்டால், உயர்கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட்டு, தங்களுக்கான பாடங்களையும், பாடத்திட்டங்களையும் சிறப்பாக தயாரிக்க முடியும். மேலும், தேர்வுகளை முறையாக நடத்தி, ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் நன்றாக மேற்கொள்ள முடியும்.
உயர்கல்வித்துறையை வலுப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த முடிவால், உயர்கல்வி நிறுவனங்கள், சுதந்திரமாகவும், படைப்பாக்கத் திறனுடனும் முடிவுகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம், ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரிக்கும். மேலும், தங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து தடையின்றி பெறுவதற்கு வழியேற்படும்.
இதற்கான ஆலோசனைகள் முந்தைய ஆண்டுகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தவைதான். இப்போதுதான் அது அமலாகும் நிலைக்கு வந்துள்ளது.
எதிர்மறை கருத்துக்கள்
பல சுயாட்சி மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைகள் இன்றைக்கு நியாயமான முறையில் செயல்படுவதில்லை. அவை, ஊழல் மலிந்ததாகவும், ஒரு வணிக நிறுவனம் போலவும் செயல்படுகின்றன.
வருமானம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே கொண்டு, பல உயர்கல்வி நிறுவனங்கள் பண முதலைகளால் தொடங்கப்படுகின்றன. எனவே, இந்த புதிய செயல்திட்டம், மிகவும் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புடன் செயல்படுத்தப்படவில்லை என்றால், இந்திய உயர்கல்வி மேலும் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.
இவ்வாறு பல நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் இதுதொடர்பாக, கல்வியாளர்கள் மத்தியில் நிலவுகின்றன.
மத்திய மனிதவள அமைச்சகத்தின் முடிவில் இருக்கும் இந்த புதிய செயல்திட்டம், நடைமுறைக்கு வரவேண்டுமெனில், அதற்கு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment