பாதுகாப்பற்ற நிலையில் இயங்கும், நர்சரி, பிரைமரி பள்ளிகளின் அவல நிலை குறித்து, "தினமலர்" நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தொடக்க கல்வித் துறை, தமிழக அரசிடம், விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில், விரைவில், தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், 2,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள், ஆபத்தான நிலையில் இயங்கி வருவது குறித்து, தினமலர் நாளிதழில், நேற்று, விரிவாக செய்தி வெளியானது. அங்கீகாரம் இல்லாமலும், பாதுகாப்பு இன்றி, அவசர நேரத்தில், குழந்தைகள் வெளியேறுவதற்கு கூட வழியில்லாமல், குறுகிய இடங்களில் இயங்கி வரும் பள்ளிகள் குறித்தும், செய்தி வெளியானது.
இதையடுத்து, பாதுகாப்பில்லாமலும், அங்கீகாரம் இன்றியும் இயங்கும் பள்ளிகளின் விவரங்கள் குறித்து, தொடக்க கல்வித் துறை, நேற்று, தமிழக அரசுக்கு, அறிக்கை சமர்ப்பித்தது. 32 மாவட்டங்களிலும் உள்ள நர்சரி, பிரைமரி, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; இவற்றில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்; போதிய இட வசதி இல்லாமலும், ஆபத்தான பழைய கட்டடங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: குழந்தைகளுக்கு, ஏதாவது தீங்கு நடந்து விடுமோ என்பது தான், எங்களுக்கு கவலையாக உள்ளது. தினமலர் நாளிதழில் வெளியான செய்தியின் மூலம், பிரச்னைக்கு, முடிவு கிடைக்கும் என, நம்புகிறோம். பிரச்னை குறித்து, 32 மாவட்டங்களில் இருந்தும், முழுமையான அறிக்கைகள், இயக்குனரகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை தொகுத்து, அரசுக்கு, கல்வித்துறை அனுப்பியுள்ளது. விரைவில், அரசு, நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இயங்கும் பள்ளிகளை, தயவு, தாட்சண்யம் இன்றி, இழுத்து மூடுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. "இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசின் நடவடிக்கை அமையும்" என எதிர்பார்ப்பதாக, பெற்றோர் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment