
சமீபத்தில் செவ்வாயில் மீத்தேன் வாயு பெரிய அளவில் இருப்பதாக நம்பியிருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலான செய்தியை கியூரியாஸிட்டி ரோபோ அனுப்பியது. செவ்வாயில் மீத்தேன் வாயு இல்லை என்று அது தெரிவித்தது.
அதையடுத்து, செவ்வாயில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். இந்நிலையில், கியூரியாஸிட்டி ரோபோவின் இன்னொரு ஆய்வு விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. செவ்வாயின் ஒரு பிடி மண்ணை எடுத்து கியூரியாஸிட்டி ரோபோ உஷ்ணப்படுத்தியது. அப்போது அந்த மண்ணிலிருந்து நீராவி வெளியேறியதாக ரோபோவை ஆய்வு செய்துவரும் லவ்ரீ லெஷின் மற்றும் அவருடைய சகாக்கள் சயின்ஸ் என்ற அறிவியல் இதழுக்கு அளித்த பேட்டியில் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். செவ்வாயின் சிவப்பு நிறத்தில் 2 % எடை தண்ணீர் என்று அவர்கள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அதாவது, ஒரு சதுர அடி மண்ணை எடுத்து சில நூறு டிகிரி சூடுபடுத்தினால், இரண்டு காலன் தண்ணீர், அல்லது இரண்டு பாட்டில் தண்ணீர் பெற முடியும் என்கிறார்கள்.செவ்வாயின் எல்லாப் பகுதியிலும் இதுபோன்ற மண்தான் காணப்படுகிறது. அதாவது எந்தப் பகுதியில் இறங்கினாலும் மண்ணிலிருந்து தண்ணீரைப் பிரிக்கமுடியும்.
அதேசமயம் இந்த தண்ணீரால் நல்லதும் இருக்கிறது…கெட்டதும் இருக்கிறது என்று லெஷின் மற்றும் அவருடைய சகாக்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, செவ்வாயின் மண்ணில் கார்பன் டை ஆக்ஸைடு கலந்திருக்கிறது. ஆக்சிஜன், குளோரின் ஆகியவையும் இருக்கின்றன. எனவே, தண்ணீரில் கார்பொனேட் கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த கனிமங்கள் பெர்க்ளோரேட் என்ற கனிமத்திலி ருந்து உடைந்து உருவானவை. பெர்க்ளோரேட் கனிமம் செவ்வாயின் மண்ணில் அரை சதவீதம் கலந்திருக்கிறது. இது தைராய்டு பிரச்சனையை உருவாக்கும். எனவே, தண்ணீர் கிடைக்கும் என்பது விண்வெளி வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், தைராய்டு பிரச்சனை என்பது கெட்ட செய்தியாகும். எனினும் பெர்க்ளோரேட்டை பிரிப்பது எப்படி என்பதை பின்னர் திட்டமிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment