கட்டணப் பிரச்னைக்கு உள்ளான அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி குறித்து விசாரணை நடத்த, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை, அடையாறு, காந்திநகரில், கூட்டுறவு சங்க பதிவில் உள்ள, 'பாலவித்யா மந்திர்' என்ற பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.அங்கு, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 1,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்; ஆசிரியர்கள், 104 பேர் பணிபுரிகின்றனர்.அந்த பள்ளியில், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு, 'விருப்பம் - 1, விருப்பம் - 2' என்ற ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
'விருப்பம் - 1':
* சிங்காரவேலன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்கப்படும்
* கட்டணத்தை வரிசையில் நின்று கட்ட வேண்டும்
* தினசரி, 4:54 மணி நேரம் மட்டும் வகுப்பு நடத்தப்படும்
* 'விருப்பம் - 2'ல் உள்ள, 59 வகையான சிறப்பு சேவையில், கல்வி வசதிகள் வழங்கப்பட மாட்டாது
* உணவகம், கழிப்பறை பயன்படுத்த கட்டுப்பாடு
* மாணவர்களுக்கு, விளையாட்டு, நடனம் உள்ளிட்ட தனித்திறமை ஆர்வம் இருந்தாலும், 'விருப்பம் - 2'ல் சேர்ந்தால் மட்டுமே அதற்கான பயிற்சி வழங்கப்படும்
'விருப்பம் - 2':
* பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்
* கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி உள்ளது
* காலை 8:30 முதல் மாலை, 3:40 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும்
* 59 வகையான கல்வி சேவைகள் வழங்கப்பட்டு, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
பள்ளி நிர்வாகத்தின், இந்த நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக, பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர், பிரச்னைக்கு தீர்வு காண வழி தேடுகின்றனர்.
ஆசிரியர்கள் எதிர்ப்பு:
இந்த நிலையில், ஒரே வகுப்பு மாணவர்களை, இரண்டாக பிரித்து பாடம் நடத்த, இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே விரும்பவில்லை. அதனால், அவர்களும், பெற்றோருக்கு ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:எங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால், அவர்களை ஒரே மாதிரி தான் கவனிப்போம். அதுபோல், தான் இதுவரை பள்ளியிலும் செயல்பட்டோம். திடீரென, மாணவர்களை இரண்டாக பிரித்து, பாடம் நடத்த எங்கள் மனசாட்சி இடம் கொடுக்காது. நிர்வாகத்திற்கு எங்கள் தரப்பு எதிர்ப்பை தெரிவித்ததால், பல்வேறு வழிகளில் மிரட்டப்படுகிறோம். எங்கள் பிள்ளைகள் போல் தான் மாணவர்களை பார்ப்போம். ஒருபோதும், மாணவர்களை பிரித்து பார்த்து பாடம் நடத்த மாட்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாணவர்கள் கட்டணத்தில்...:
இது ஒருபுறமிருக்க, பெருங்குடி, சேலம், கோயம்புத்துார் உள்ளிட்ட ஆறு இடங்களில், இந்த பள்ளி நிர்வாகம், 'வி.பி.எம். குளோபல் எஜுகேஷன்' என்ற பள்ளியை நடத்தி வருவதாகவும், அடையாறு பள்ளியில் வசூலிக்கும் நன்கொடை மற்றும் அதிக கட்டணத்தை, அந்த பள்ளியில், முதலீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், 330 கோடி ரூபாய் மதிப்புள்ள அடையாறு பள்ளியை, அடமானம் வைத்துள்ளதாகவும், அதனால், எதிர்காலத்தில் பள்ளிக்கு சிக்கல் வரும் எனவும் கூறப்படுகிறது.அதுகுறித்து கேட்க, நமது நிருபர், பள்ளி நிர்வாகத்தை அணுகியபோது, 'பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க விரும்பவில்லை' என, பதில் வந்தது.இதற்கிடையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணயக் குழுவான நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, இந்த பிரச்னையை தானாக முன்வந்து விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை சிங்காரவேலு கமிட்டி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
பெற்றோர் பேட்டி
பாதிக்கப்படுவர் :
கற்பகம்: என் மகன் 7ம் வகுப்பு படிக்கிறான். பள்ளி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணமான, 50,000 ரூபாயை செலுத்த கூறுகின்றனர். அப்படியே செலுத்தினாலும், மாணவர்களை இரண்டாக பிரித்து பாடம் நடத்தினால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவர்சொர்ணலதா: ஐந்து பேரின் தவறான செயலால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பிரச்னை பெரிதாகி வெளியுலகுக்கு தெரிந்த பிறகும், பள்ளி நிர்வாக தரப்பில் இருந்து யாரும் பேச வராதது சந்தேகத்தை எழுப்புகிறது
ராஜிசுந்தர்: பணத்தை வைத்து இரண்டு விதமான வசதி செய்து கொடுத்து, பாரபட்சம் காட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? உணவகம், குடிநீர், கழிப்பறை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்தால், ஒருவித ஏற்றத்தாழ்வு, தனிமைப்படுத்துதல் போன்றவை, மாணவர்கள் மத்தியில் மேலோங்கி தவறான வழிகளுக்கு இட்டு செல்லும்
திருமலைக்குமாரசாமி: இரண்டு பேரன்கள் இங்கு படிக்க, ஆயிரக்கணக்கில் பணம் கட்டிவிட்டு நடுத்தெருவில் நின்று நியாயம் கேட்கிறேன். அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க, கல்வித்துறை வலியுறுத்த வேண்டும்.
இந்நிலையில், பால வித்யா மந்திர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த, தனி அதிகாரியை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டார். இதன்படி விசாரணை அதிகாரியாக, இடைநிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்தார்.பால வித்யா மந்திர் பள்ளி முதல்வர், செயலர், தலைமைச் செயல் அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த, சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. விசாரணை அதிகாரி கார்மேகம், இன்று விசாரணை நடத்தவுள்ளார்.
No comments:
Post a Comment