Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 24, 2015

    பருவநிலை மாறுதல் நம் வாழ்வின் முக்கிய அங்கம்


    நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் காற்றில் கரிப்புகை அதிகமாகி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அதனால் புவி வெப்பம் அதிகரிக்கிறது; அவற்றின் விளைவாகப் பருவமழைப் பொழிவு குறைவது உட்படப் பல இயற்கை மாறுதல்கள் ஏற்படுகின்றன.
    இதைத் தடுத்து நிறுத்தத் தன்னுடைய பத்திரிகை வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று லண்டனிலிருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஆலன் ரூஸ்பிரிட்ஜர் தீர்மானித்தார். அதைத் தன்னுடைய பத்திரிகை அலுவலக நண்பர்களிடம் தெரிவித்தார். அவர்கள் உற்சாகத்துடன் அதை வரவேற்றுத் தங்கள் பங்குக்குப் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தனர். நாளிதழில் பிரச்சார இயக்கம் தொடங்கிவிட்டது.


    இந்தப் பிரச்சார இயக்கம் தொடர்பாக ரூஸ்பிரிட்ஜரிடம் பேசினேன்.

    ஏன் இந்தப் பிரச்சாரம், அதுவும் இப்போது?

    புவி வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருவது நம் வாழ்வின் முக்கியமான செய்தியல்ல என்று கருதினாலும், நம்மைப் பாதிக்கப்போகிற மிக முக்கியமான செய்தி இது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. பருவநிலை மாறுதல் என்பது பல்வேறு உயிரினங்களின் தொடர்ச்சியையே கேள்விக்குறியாக்கிவருகிறது. இதிலிருந்து மீளவோ, இந்தப் போக்கை மாற்றவோ நமக்கு நீண்ட அவகாசம் கிடையாது. உலகின் புவி வெப்பநிலை இப்போதிருப்பதைவிட இன்னும் 2 சென்டிகிரேடு உயர்ந்தால், கோடிக் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர்.

    அறிவியல், சுகாதாரத் துறையில் அதிக முதலீடுகளை ‘வெல்கம் டிரஸ்ட்’, ‘பில் & மிலிண்டா கேட்ஸ் டிரஸ்ட்’ ஆகியவை செய்துள்ளன. அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் புத்திசாலிகள், முற்போக்கானவர்கள் என்பதால், புதைபடிம எரிபொருள் நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டை விலக்கிக்கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்தோம்.

    இப்படித்தான் பிரச்சாரத்தைத் தொடங்கினோம். பிறகு, செய்திகளையும் செய்திக் கட்டுரைகளையும் வெளியிட்டோம். பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் இந்தப் பிரச்சாரத்தை இனியும் தொடர்வோம்.

    நீங்கள் எதிர்பார்த்த விளைவை இந்த இயக்கம் ஏற்படுத்திவருகிறதா? எதிர்வினை எப்படி இருக்கிறது, யாரிடமிருந்து வருகிறது?

    பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரச்சாரம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் பிரிட்டனுக்குள் ட்விட்டர் மூலம் அதிகம் பரவியது இந்தத் தகவல்தான். 1,80,000 பேர் எங்களுடைய கோரிக்கைகளை ஆதரித்துக் கையெழுத்திட்டுள்ளனர். 6,000 மக்கள் தங்களுடைய பதில் கருத்தை எங்களுக்கு எழுதினர். இந்தியா, சீனா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று எல்லா நாடுகளிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகிறார்கள்.

    உங்களுடைய கோரிக்கைக்கு, வளரும் நாடுகளில் அதிக வரவேற்பு இருக்காது. நீங்கள் கூறுகிறபடி இப்போதுள்ள புதைபடிம எரிபொருள் நிறுவனங்களிலிருந்து முதலீட்டை விலக்கிக்கொண்டு, மாற்று எரிபொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கினால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். பெரும்பாலான மக்களுக்குத் தரமான ஆற்றல் கிடைப்பது நின்றுவிடும். இப்போதுள்ள நிலையில், சூரியஒளி மின்சக்திக்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கும் விவசாயத்துக்கும் சமையல் எரிவாயு, டீசல், கெரசின் போன்றவற்றின் மீதான மானியம் தொடர வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்களுடைய பிரச்சாரத்தில் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    ஒரு செயலை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான வாதங்கள் எப்போதும் இருக்கும். எதையும் செய்வதற்கு உற்ற நேரம் எது என்ற கேள்வியும் அடுத்து எழும். இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக நிலக்கரியை அதிக அளவில் எரித்துச் சூழலை மேலும் நஞ்சாக்கப்போகிறது என்பதே உலக நாடுகளின் கவலை. அப்படிச் செய்ய வேண்டாம் என்று உலக நாடுகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தால், அதன் பிறகு மானியங்கள்குறித்து நாம் பரிசீலிக்கலாம். சூரியஒளி மின்சக்தி அதிகம் செலவு பிடிக்கக்கூடியது என்கிறீர்கள். சீனத்திலோ அதன் விலை குறைந்துவருகிறது. விலைதான் பிரச்சினை என்றால், இப்போது மின்உற்பத்திக்கு ஆகும் செலவுகளைக் கணக்கெடுக்க வேண்டும். இந்தியாவில் அதிகப் பகுதிகளில் அதிக நாட்களுக்குச் சூரிய வெளிச்சம் இருப்பதால் பிரச்சினையே கிடையாது. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு முதல்முறை முதலீடு செய்யும் தொகையைத் தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் அதிக செலவு கிடையாது. பராமரிப்பு மட்டுமே மேற்கொள்ளப் பட வேண்டும்.

    கரிப்புகை வெளியீட்டைக் குறைக்க, மாற்று முறைகளுக் கான செலவுகளை நியாயமான முறையில் நாடுகள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைக் கெடுத்ததில் அதிகப் பங்கு வகித்த வளர்ந்த (பணக்கார) நாடுகள்தான் இந்தச் சுமையையும் அதிகம் சுமக்க வேண்டும் என்கின்றன வளரும் நாடுகள். உங்களுடைய இயக்கம் இதில் என்ன நிலை எடுக்கவிருக்கிறது?

    இது முக்கியமான அம்சம்தான் என்றாலும் வாசகர்கள் தெரி்ந்துகொள்ள அதிகம் ஏதுமில்லை. சிலர் கூறினார்கள், அணுமின்சாரம் குறித்து உங்கள் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று. இந்த விவாதக் களத்தை விரிவுபடுத்திக்கொண்டே போனால், இது சுற்றுச்சூழல் மாசுபற்றிய விவாதமாக மட்டுமே உருமாறிவிடும். எங்களுடைய பிரச்சாரம் புவிவெப்ப உயர்வுபற்றி மட்டுமே கவனம் செலுத்தும்.

    அணுசக்தி குறித்து உங்கள் நிலை என்ன? இதை மரபுசாராத எரிசக்தியாகப் பார்க்கிறீர்களா?

    இந்த விவாதத்தில் இறங்க விரும்பவில்லை. அணுசக்தி தொடர்பாக எங்கள் நிலை இது என்று நாங்கள் கூறினால், விவாதமே மாறிவிடும். நீங்கள் முதலில் இதை நிரூபியுங்கள், அதை நிரூபியுங்கள் என்று எல்லாத் தரப்புகளிலிருந்தும் பேசத் தொடங்கிவிடுவார்கள். ஒரு காலத்தில் இவையெல்லாம் நல்ல விவாதத் தலைப்புகள். இதை எதிர்காலத்திலும் விவாதித்துக்கொள்ளலாம். எங்களுடைய பிரச்சாரத்தில் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே குவிமையமாக வைத்திருக்கிறோம். அது வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    புதைபடிமம் அல்லாத எரிபொருள் என்றால், சூரியஒளி மின்சாரமும் காற்றாலை மின்சாரமும்தானா?

    எங்கள் பத்திரிகையில் சுற்றுச்சூழல் பற்றி எழுத ஐந்து நிருபர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆயிரக் கணக்கான வார்த்தைகள் இதுகுறித்து எழுதிவிட்டனர். ‘கார்டியன்’ இதைப் பற்றியெல்லாம் எதையும் கூறவில்லை என்று யாரும் எங்கள் மீது குற்றஞ்சாட்டிவிட முடியாது. இப்போது நாங்கள் வித்தியாசமாக ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். எங்களுடைய வாசகர்களை மட்டும் இவை அடையவில்லை. முதலீட்டுத் துறையில் தொடர்புள்ள வங்கியாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் போன்றோரும் எங்களுடைய பிரச்சாரங்களைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இப்போது சமூகச் சந்திப்புகளில் இதுபற்றிப் பேசுகின்றனர். இது மெல்ல அரசியல்வாதிகளுடைய விவாதங்களிலும் இடம்பெறும். பிறகு மாற்றங்கள் வரும்.

    எவ்வளவு நீக்குப்போக்கானது உங்களுடைய பிரசாரக் கட்டமைப்பு? புவிவெப்பம் அடைவதற்கு நிலக்கரியும் பெட்ரோலியப் பண்டங்களும்தான் காரணம் என்றால், முதலீட்டை விலக்க வேண்டும் என்ற உங்களுடைய கோரிக்கையைப் போக்குவரத்து வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் குறிவைத்துத்தான் தொடங்கியிருக்க வேண்டும் அல்லவா? பெட்ரோல், டீசலில் ஓடும் கார், வேன்களைத் தயாரிக்கும் வோக்ஸ்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களிலிருந்துதானே முதலீட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்?

    நல்ல யோசனை. அதுவும் நல்ல பிரச்சாரமாக இருக்கும். எங்களுடைய பிரச்சாரம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியது. இந்தத் துறையில் முதலீடு செய்வது குறித்து மக்களிடம் மாற்றங்கள் தென்படுகின்றன. நீங்கள் நுகர்வோர்களையும் உற்பத்தியாளர்களையும் குறிப்பிடுகிறீர்கள். அவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டுவது நல்ல பிரச்சாரமாக இருக்கும். இதை ‘தி இந்து’கூடச் செய்யலாம் (சிரிக்கிறார்). புதைபடிம எரிபொருட்களால் புவி வெப்பம் அதிகரிப்பதுகுறித்து அனைத்துத் தரப்பினருக்கும் எச்சரிக்கை செய்து விழிப்புணர்வு ஊட்டுவது ஒவ்வொரு பத்திரிகையாளரின் கடமையுமாகும். அதன் மூலம் மக்களுடைய மனோ பாவங்களை மாற்றிவிடலாம்.

    தலைமை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் இந்தப் பிரச்சாரத்தைத் தொடருவீர்களா?

    எதிர்காலத்தில் உங்களுடைய பேரப்பிள்ளைகள் உங்களைப் பார்த்து, உலகையே பாதிக்கும் ஒரு பிரச்சினை தொடர்பாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களைக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வீர்கள்? இதில் பங்கேற்காவிட்டால் உங்களால் திருப்தியான பதிலைச் சொல்ல முடியாது. எது நடந்தாலும் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டுக் குறை சொல்வது எளிது. புவி வெப்பமடைவதைத் தடுக்க இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாவிட்டாலோ, கற்பனையாக ஏதாவதொரு காரணத்தைக் கூறினாலோ என்ன (சமூக) பொறுப்பு நமக்கு இருக்கிறது?

    © ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

    No comments: