அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் ஏப்ரலில் வெளியிடப்பட்டது. கல்லுாரி திறக்கப்படும் நிலையில் பணி நியமன உத்தரவு கிடைக்காததால் தேர்வானவர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசுக் கல்லுாரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 மார்ச் 15ல் வெளியிடப்பட்டது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.
ஆசிரியர் பணி அனுபவம், கல்வித் தகுதி, நேர்காணல் என மதிப்பெண் தனித்தனியாக வழங்கப்பட்டது. இதில் பிஎச்.டி., அல்லது 'நெட்' அல்லது 'ஸ்லெட்' தேர்ச்சி கட்டாயம்.இதன்படி, 2013 நவ.,25ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 2014 ஆக.,8ல் நேர்காணல் நடத்தி தேர்வானவர்களின் பட்டியல் ஏப்.,4ல் வெளியிடப்பட்டது. ஆனால் நியமன உத்தரவு இன்னும் வரவில்லை.
'மாற்றுப்பணி' அதிர்ச்சி: ஜூன் 18ல் கல்லுாரிகள் துவங்கும் நிலையில், அரசுக் கல்லுாரிகளில் காலி இடங்களுக்கு பிற அரசு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மாற்றுப் பணியாக நியமிக்கப்படுகின்றனர். இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.தேர்வானவர்கள் கூறியதாவது:அரசுக் கல்லுாரியில் வேலை என்பதால் இதற்கு முன் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்த தனியார் கல்லுாரி பணியை ராஜினாமா செய்தோம். பட்டியல் வெளியாகியும் இன்னும் உத்தரவு கிடைத்தபாடில்லை. இதனால் குடும்ப பொருளாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
டி.ஆர்.பி., தரப்பில் கேட்டால் 'கவலை வேண்டாம் விரைவில் உத்தரவு வரும்' என்கின்றனர். இதற்கிடையே மாற்றுப்பணி மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் கல்வித்துறை இதில் கவனம் செலுத்தி விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment