வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றே பக்கங்களில், மிகக் குறைவான நிரப்புதல் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஜூலை 31க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல் படிவங்களுக்கான காலக்கெடு, இந்த ஆண்டு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31க்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல், நேரடி வரி முறையிலும், மறைமுக வரி விதிப்பிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது போல, வரி விலக்குகளால், வரி செலுத்துவோருக்கு கிடைக்கும் பலன்களும் உயர்ந்துள்ளன.
வகைபடுத்தப்பட்டுள்ளன:
அந்த வகையில், நேரடி வரிகள் வாரியம், வருமான வரி தாக்கல் படிவத்தையும் மாற்றியமைத்துள்ளது. அவரவர் செய்யும் தொழில், வருமானம் போன்ற வற்றின் அடிப்படையில், வருமான வரி செலுத்தும் படிவங்கள், ஐ.டி.ஆர்., என்றும், ஐ.டி.ஆர்., --- 1 என்றும், ஐ.டி.ஆர்., - 2, ஐ.டி.ஆர்., - 2ஏ, ஐ.டி.ஆர்., - 4எஸ் என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளன.இதற்கு முன், அந்த படிவங்கள் மிகவும் சிக்கலானதாகவும், அவற்றை நிரப்ப அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், அதில் உள்ள தகவல்கள் பல தேவையற்றதாகவும் இருந்த நிலை மாற்றப்பட்டு, மொத்தம், மூன்றே பக்கங்களில், தனிநபர் மற்றும் இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
சலுகைகள்:
அதுபோல, கால நீட்டிப்பும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விவரம்:
*வருமான வரி படிவம் தாக்கல் செய்ய கடைசி தேதியாக, ஜூலை 31ம் தேதியாக இருந்தது. இந்த ஆண்டு முதல், ஆகஸ்ட் 31ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
* இதற்கு முன், இந்த படிவங்களில் இருந்த, செயல்படாத வங்கிக் கணக்குகள் குறித்த விவரத்தை, இனிமேல் இந்த படிவத்தில் குறிக்கத் தேவையில்லை. மாறாக, தங்களின் வங்கி விவரத்தை, ஐ.எப்.எஸ்., கோடு எண்ணை தெரிவிப்பதன் மூலம் அந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
* மேலும், ஓராண்டில் எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளீர்கள் என்ற கேள்வி மாற்றப்பட்டு, பாஸ்போர்ட் எண் மட்டும் கேட்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் படிப்பவர், தொழில், வேலை செய்பவராக இருந்து, இந்திய குடிமகனாக இல்லாமல் இருந்தால், அவர் வசம் உள்ள வெளிநாட்டு சொத்து கள் குறித்த விவரத்தை, இனிமேல் தாக்கல் செய்யத் தேவையில்லை.
தனிநபர் வருமான வரி :எவ்வளவு செலுத்தணும்?
1மொத்த வருமானம், 2.5 லட்சம் ரூபாயை அதிகரிக்காமல் இருந்தால் - வரி கிடையாது
2மொத்த வருமானம், 2.5 லட்சம் - 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் - 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், 5 லட்சம் ரூபாய் வரை எவ்வளவு தொகை உள்ளதோ, அதில், 10 சதவீதம்
3மொத்த வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்து, 10 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் -
25 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்தில் 20 சதவீதம்
4மொத்த வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் - 1.25 லட்சம் ரூபாய் மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எவ்வளவு தொகை உள்ளதோ, அதில், 30 சதவீதம்
பதிலளிக்காதவர்களுக்குரூ.2 லட்சம் அபராதம்!
வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காத வருமான வரி செலுத்து வோருக்கு, அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையிலான சட்டம், அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. சமீபத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ள, கறுப்பு பணம் (வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் பதுக்கல்) தடுப்பு சட்டம் மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015ன் படி, இந்த புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரித்துறை, இ - மெயில், 'பேக்ஸ்' அல்லது 'சம்மன்' மூலம், நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீசுக்கு, பதிலளிக்க தவறுபவர்களுக்கு, குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, இந்த புதிய சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய சட்ட மசோதா, லோக்சபாவில், மே 13ல், ராஜ்யசபாவிலும், அடுத்த நாள் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 26ல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை அடுத்து சட்டமாகியுள்ளது.
No comments:
Post a Comment